‘Ice Bucket Challenge’ அதென்ன பைத்திய வேலை..?
1 min readதற்போது சமூக வலைதளங்களில் Ice Bucket Challenge எனும் ஒரு விடயம் பிரபலமாகி வருவதை காண்கிறோம். யூடியுப்பில் பல பிரபலங்கள் தம் தலைகளில் குளிர் நீரை ஊற்றிக் கொள்வதும் இன்னும் மூவருக்கு சவால் விடுவதுமாக அந்தக் காணொளிகள் அமைந்திருப்பதைக் காணலாம். இது என்ன கலாசாரம்? எதற்காக குளிர் நீரை தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள்? விநோதத்திற்காகவா? விளையாட்டுக்காகவா? என்ன பைத்திய வேலை இது? என நான் தேடியபோது.. கிடைத்த சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறேன்.
முதலில் இதன் ஒழுங்கு விதிகளைப் பார்ப்போம்..!
‘குளிர் வாளி சவால்’ அல்லது புரியும் பாசையில் சொல்வதென்றால் ஐஸ் பக்கெட் செலன்ச் இற்கு பங்கேற்பவர் அல்லது இந்த சவாலை ஏற்றவர் செய்யவேண்டியது என்னவென்றால் ஐஸ் கட்டிகள் இடப்பட்ட நீர் வாளியால் குளிப்பதே..! ஐஸ் பக்கெட் சவால் என்று குரல் எழுப்பிக் கொண்டு ஐஸ் வாளியால் குளித்ததன் பின்னர் குறித்த நபர் இன்னும் பலருக்கு இந்த சவாலை விட வேண்டும். குறிப்பாக மூவரின் பெயர்களை பிரேரிப்பார்.
அப்படி பெயர் குறிப்பிடப்பட்ட மூவரும் 24 மணி நேரத்திற்குள் ஐஸ் வாளி சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டும். முகங்கொடுத்து காணொளியை யூடியுப், இன்ஸ்டக்ராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இற்றைப்படுத்த வேண்டும்.
சவாலுக்காக பெயர் குறிப்பிடப்பட்டவர் இந்த சவாலை ஏற்காது மறுத்தால் அவர் 10 அமெரிக்க டொலர்கள் ALS சங்கத்திற்கு வழங்க வேண்டும்.
ALS சங்கத்திற்கு நிதி திரட்டுதலே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. Amyotrophic Lateral Sclerosis என்ற நோயில் இருந்து உலக மக்களை பாதுகாப்பதற்கான பரிசோதனைகளுக்கு அவசியமான நிதியை திரட்டுவதே சங்கத்திற்கு முக்கிய நோக்கமாக அமைந்தது.
ALS எனப்படுவது நரம்பு சம்பந்தமான ஒரு நோய். இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். நிரந்தர பக்கவாதத்தை தோற்றுவிக்கும். இந்த நோய் பாதித்தவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சு விடக் கூட சிரமமாக இருக்கும். அவர்களின் கட்டுப்பாட்டில் எந்த செயல்களும் இருக்காது. இந் நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 2 அல்லது 5 வருடங்கள் தான் உயிருடன் இருக்க முடியும். இந்த வகை நோயாளிகளில் 4 சதவீதம் பேரே 10 ஆண்டுகளை தாண்டி வாழ்வார்கள். உலக மக்கள் தொகையில் லட்சத்தில் இருவருக்கே ALS நோய் ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. அதேபோல் இதுவரை இந்த நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயளர்களுக்கு வழங்கும் மருந்துகளின் மூலம் நோய் பரவும் வீரியத்தை குறைக்க மட்டுமே முடியும். நோயை முற்றாக ஒழிக்கும் மருந்துகளை பரிசோதித்து வருவதாக ALS சங்கம் தெரிவிக்கிறது.
ALS நோய் குறித்து மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் அவசியமான செலவுகளுக்கு இந்த Ice Bucket Challenge மூலம் கிடைக்கும் நிதியை பயன்படுத்துவதாக ALS நிறுவனம் மேலும் தெரிவிக்கிறது. எனவே, இந்த ALS நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிகிச்சைக்கு நிதி திரட்டவும் தான் இந்த Ice Bucket சவால் விடுக்கப்படுகிறது. இந்த சவால் தற்போது மகிவும் பிரபலமாகி வருவதுடன் நிதியும் குவிகிறது.
22.08.2014
குறிப்பு:
இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் வெளியான ஒரு செய்தி கீழே:
ஐஸ் பக்கெட் சவாலை பிரபலப்படுத்திய இளைஞர் நீரில் மூழ்கி மரணம்.
பொதுநல காரியங்களுக்காக நிதி திரட்ட, “ஐஸ் பக்கெட் சவால்” என்ற விளையாட்டை இணையத்தில் பிரபலமடைய செய்த இளம் கொடையாளர் கோரி க்ரிஃபின், டைவிங் விளையாட்டின்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
லோஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மிக பிரபலமான நீச்சல் தடகத்தில் தண்ணீருக்குள் மூச்சு திணறி மரணமடைந்தார். கோரி க்ரிஃபினின் வயது 27 என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல கொடையாளி ஆன கோரி க்ரிஃபின், அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ) என்ற நோய் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள நிதி திரட்ட, ஐஸ் பக்கெட் என்கிற, பக்கெட் முழுவதிலும் உள்ள ஐஸ் கட்டிகளை தலையில் கொட்டிக்கொள்ளும் விளையாட்டைப் பிரபலப்படுத்தினார்.
அவர் பரப்பிய ஐஸ் பக்கெட் விளையாட்டில், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பக், ஓப்ரா வின்ஃபரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என பிரபலங்கள் பலர் பங்கேற்றதால், இந்த விளையாட்டு இணையத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் உலக அளவில் முன்னணி பிரபலங்கள் பலர் ஆர்வமாக இந்த சவாலை ஏற்று விளையாடி வருகின்றனர், ஐஸ் பக்கெட்டை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய பெருமை கோரி க்ரிஃபினையே சேரும்.
-newsfirst. lk