எதற்காக பாடசாலை செல்கிறீர்கள்?
1 min readஎன்ன கேள்வி இது? நீங்கள் யோசிக்கலாம். யோசிக்கத்தான் இந்தக் கேள்வி. சாதாரணமான ஒரு கேள்வியாக இருந்தாலும் அடிக்கடி கேட்கப்படவேண்டிய ஒருகேள்வி. காரணம், ஒவ்வொரு மாணவர்களுக்கும் முக்கியமான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியைக் கேட்டால், பல்வேறு விதங்களில் விடைகள் வரலாம். வரும்.
மாணவர்களே! நீங்கள் எதற்காக பாடசாலை செல்கின்றீர்கள்? இந்தக் கேள்விக்கான பதில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்துதான் பாடசாலைக்குச் செல்கின்றீர்களா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! இந்தக் கேள்விக்கு நீங்கள் விடை அறிந்து செயற்பட்டால் மாத்திரமே உங்களுக்கு முன்னுள்ள பொறுப்பு உங்களை உறுத்தும். நீங்கள் பாடசாலைக்கு செல்வதன் நோக்கமும் நிறைவுறும்.
நீங்கள் 5 வயதாகும் போது பாடசாலை செல்ல ஆரம்பிக்கின்றீர்கள். 11 வருடங்கள் அல்லது 13 வருடங்கள் பாடசாலை செல்கிறீர்கள். அதன் பிறகு வாய்ப்புக் கிடைத்தால் பல்கலைக்கழகம் நுழைகிறீர்கள். எனவே, இது மிகக் குறுகிய ஒரு காலப்பகுதியல்ல. உங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒருபகுதி. வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை எதற்காக பாடசாலைக்குள் கழிக்க வேண்டும்? எப்போதாவது யோசித்து விடை தேடியிருக்கிறீர்களா?
குறித்த ஒரு பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம், எதற்காக பாடசாலைக்கு வருகிறீர்கள் என்று கேட்டேன். தற்செயலாக இந்தக் கேள்வியைக் கேட்டதும் மாணவர்கள் அனைவரும் சப்தம் இன்றி உறைந்து போனார்கள். பதில் ஏதும் வராததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். இம்முறை ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள். இது, விடைதெரியாத ஒரு கேள்வி, கேட்கக் கூடாத ஒரு கேள்வி அல்லது 11 ஆம் வகுப்பில் இந்தக் கேள்வி கேட்டது பொருத்தமில்லை என்பது போல் இருந்தது அவர்களது செயல். நான் நினைத்தது போல் ஒரு மாணவன்: ‘எதுக்கு ஸேர், இப்ப இந்தக் கேள்வி? அதுதான் 11 வருஷத்த கடத்திட்டோமே! ‘என்றான். சரி, மற்றவர்கள் ஏதும் பதில் சொல்வார்கள் என்று பார்த்தால் யாரும் பதில் சொல்லவில்லை. இந்தக் கேள்விக்கு அவர்களுக்குப் பதில் தெரியாமல் அல்ல. நன்றாகத் தெரியும். பதில் சொல்லாமைக்கு காரணம் அடுத்தடுத்த எனது கேள்விகள், பாடசாலைக்கு வரும் நோக்கம் உங்களுக்கு தெரியுமென்றால் ஏன் அந்த நோக்கம் நூற்றுக்கு ஐம்பது வீதமாவது நிறைவு பெறுவதில்லை? 11 வருடங்கள் பாடசாலைக்குள் இருந்த உங்களுக்கும், பாடசாலைக்கே வராத உங்கள் வயதொத்தவர்களுக்கும் இடையே ஏன் எந்த வித்தியாசமும் காணமுடியாதுள்ளது?
இது, அந்த மாணவர்கள் முன்னுள்ள கேள்வி மாத்திரமல்ல. நம் ஒவ்வொரு மாணவர்களின் முன்னும் உள்ள கேள்வி. இந்தக் கேள்வி கேட்கின்ற போதுதான் சிலபோது சில மாணவர்கள் முழித்துக் கொள்கிறார்கள். இத்தனை நாட்களும் பாடசாலைக்கு சென்றதன் காரணத்தை அப்போதுதான் அவர்கள் தமக்குள் கேட்டுக்கொள்கிறார்கள்.
பாடசாலை, அவை வெறும் கட்டிடங்கள் அல்ல.. பெரும் தொகை பணத்தை இறைத்து இலவச புத்தகங்கள் என்றும் சீருடைகள் என்றும் இலவசக் கல்வி என்றும் எல்லாமே இலவசமாக அரசினால் வழங்குவது எதற்காக? உங்கள் வளமான எதிர்காலத்திற்கு, நாட்டின் முன்னேற்றத்திற்கு என்பதை நீங்கள் அறிந்து புரிந்து உணர்ந்துதான் பாடசாலைக்குள் ஒவ்வொரு காலைப் பொழுதும் காலடிவைக்கின்றீர்களா?
“வீட்டில் பாடசாலைக்கு அனுப்புகிறார்கள் அதனால் நானும் வருகின்றேன்”. ”ஊரில் என் வயதை ஒத்தவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். அதனால் நானும் செல்கிறேன்”. ”உம்மா வாப்பா ஏசுவார்கள் அதனால் போகிறேன்” என்கின்ற கூற்றுக்களே அதிகமானோரின் பதில்களாக இருக்கின்றன.
இதனாலேயே பாடசாலை வாழ்வில் ஓரிரு மாணாக்கர்கள் ஜெயிக்கின்றனர் மீதி அனைவரும் தோல்வியை தழுவுகின்றனர். எல்லோரும் இதற்குரிய விடையை மனதால் உணர்ந்து செயற்படுத்தினால் உங்களாலும் ஜெயிக்கலாம்.
மாணவர்களே! இந்தக் கேள்விக்குரிய பதிலை நீங்கள் ஒவ்வொரு அதிகாலை பொழுதுகளிலும் உங்கள் உள்ளத்திடம் கேட்டுப்பாருங்கள். ஒருபதில் கிட்டும். அந்த பதிலை பரீட்சித்துப் பாருங்கள். ஜெயிப்பீர்கள்! இந்தக் கேள்வியை தமக்குள் கேட்காது பாடசாலைக்கு போய் வந்து கொண்டிருந்து உங்கள் வாழ்வை வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரு முறைதான். அதில் பாடசாலை வாழ்வும் ஒரு முறைதான். நீங்கள் Time pass க்கு பாடசாலை செல்வோராக இருக்காதீர்கள். Time உங்க pass பண்ணிக் கொண்டுபோய் விடும். காலம் நமக்காக காத்திருக்காது.
மாணவர்களே! பாடசாலை உங்களுக்கு வாழ வழிகாட்டும் இடம்! பண்படுத்தும் இடம்! இந்த இடத்தில் இந்த பருவத்தை ஏன் நீங்கள் கழிக்கின்றீர்கள் என்பதைஉணர்ந்தால்தான் உங்களால் வெற்றிகரமான வாழ்வை அடைய முடியும். அப்படி இல்லாவிட்டால் வாழ நினைத்தே வாழ்வை தொலைத்து விடுவீர்கள்.
மூங்கில் மரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? அது வானளாவ உயர்ந்;திருப்பதை காண்கின்றீர்கள். ஆனால் அது வளர குறிப்பிட்ட காலமும் பருவமும் இருக்கிறது. அது நம் மாணவ பருவம் போன்றது.
மூங்கில்மரம் தன் வளர்ச்சிக் காலத்தை விட அதிக காலத்தை வேர் பிடிப்பதில் தான் செலவு செய்கிறது. வேர் பிடித்துவிட்டால் மிக வேகமாக வளரத் தொடங்குகிறது. வேர் பிடிக்கத் தான் அதிக கால அவகாசம் எடுக்கிறது. மூங்கில் மரம் வளரவல்ல.
மாணவப் பருவம்.. வேர் பிடிக்கும் பருவம்.. வேரூன்றிவிட்டால் மிக வேகமாக வாழ்வில் உயர்ந்து விடலாம். இதற்குரிய முக்கிய தேவை இக் கேள்விக்குரிய பதில் தான்.
‘நான் எதற்காக பாடசாலை செல்கிறேன்?’
உங்கள் பதில்,
‘படிக்க! படிக்க! படிக்க!’ என்றிருந்தால் படியேறுவீர்கள். இல்லாவிடில், அதிகமானோர் நிலை போல் உங்கள் நிலையும் ஆகிவிடும்.
பாடசாலையில் 1ம் தரத்திற்கு 40 பேர் பெயர் பதிக்கின்றனர். அதில் 10 பேர் O/L வரை வருகின்றனர். 3பேர் A/L க்கு தேர்ச்சி பெறுகின்றனர். அதில் ஒருவர் மட்டுமே பல்கலைகழகத்திற்கு காலடி எடுத்து வைப்பார். ஏனிந்த நிலை?
அதே கட்டிடம், அதே கல்வியூட்டல், அதே பாடத்திட்டம், அதே ஆசிரியர்கள், சமவயதை ஒத்தவர்கள். ஆனால், ஒருவர் அல்லது இருவர் மாத்திரமே இக் கேள்வியை தமக்குள் கேட்டுக் கொண்டே முன்னேறுகின்றனர். பல்கலைகழகம் நுழைந்த அந்த ஒருவரின் பாடசாலை வாழ்க்கையின் ரகசியம் தான் என்ன?
நான் ஏன் பாடசாலைக்கு போகின்றேன் என்பதை உணர்ந்து ஆசிரியரின் கற்பித்தல் சூழலுக்கு ஏற்ப தன் கற்றல் சூழலை மாற்றிக் கொண்டதுதான். அந்த ஒரு கேள்விக்காக உள்ளம் உரைத்த அந்த ஒரே பதில் தான் அவன் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. அவன் வேரூன்றக் காரணமானது.
எனவே, மாணவர்களே! உங்கள் நிலை என்ன?
சஞ்சிகை “சவால்-6” மே-ஜூன் 2014,
-இஸ்பஹான் சாப்தீன்-