December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

‘மாணவமய முகாமைத்துவம்’

1 min read

‘மாணவமய முகாமைத்துவம்’ என்பது மாணவர்கள் தம்மை நிர்வகித்துக் கொள்வதை சுட்டிநிற்கின்றது. கற்றல் செயற்பாடுகளில் அல்லது கல்வித் தேடலில் ஈடுபடுவோரையே நாம் மாணாக்கர் என்கிறோம். கற்றல் என்பது அறிவு (Knowledge), திறன் (Skills), நேர் மனப்பாங்கு (Positive Attitude) ஆகிய மூன்றையும் விருத்தி செய்துகொள்வதை குறிக்கிறது.

உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் கற்போராகவே உள்ளனர். இருப்பினும், குறிப்பாக நிர்வாக அமைப்புக்குள் நின்று பரீட்சையை நோக்காகக் கொண்டு கற்றலில் ஈடுபடும் மாணாக்கர் தம்மை எப்படி நிர்வகித்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியே நாம் இங்கு பேசவுள்ளோம்.

பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலை, பிரத்தியேக வகுப்பு, அஹதியா-அறநெறிவகுப்பு போன்ற நிர்வாக அமைப்புக்குள் நின்று பரீட்சையை மையமாகக் கொண்டு கற்கின்ற மாணாக்கருக்கான வழிகாட்டல்கள் பற்றியே குறிப்பிடுகின்றோம்.

கற்றல்- கற்பித்தல் குறித்து பேசும் தளங்களில் (Teaching) கற்பித்தல் சார்ந்து அதிக அளவில் பேசப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். ஆனால், கற்றல் (Learning) மற்றும் மாணவர்கள் சார்ந்து பேசுவது வெகு அரிதாகவே உள்ளது.

கற்றல் செயற்பாட்டில் தம்மை நிர்வகித்துக் கொள்ளவும், முகாமை செய்துகொள்ளவும் அவசியமான வழிகாட்டல்கள் மாணாக்கருக்கு போதிக்கப்பட வேண்டும். அன்றாட நடவடிக்கைகளுக்கு மத்தியில் கற்க வேண்டும் என்பதாலும் அவர்களை முகாமை செய்துகொள்ளும் வகையில் அதிக வழிகாட்டல்களை அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.

இன்று, கற்றல் செயற்பாட்டில் ஈடுபடும் மாணவர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு பொறுப்புகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொறுப்புக்களை கருத்திற் கொண்டு தம்மை சீர்தூக்கிப் பார்த்து அபிவிருத்திக்காய் தம்மை நிர்வகித்துக் கொள்வது அவசியமாகிறது. இதற்குக் காரணம், ‘மாணவர் மையக் கல்வி’ (Student based Education) எனும் செயற்பாட்டில் ‘கற்போர் கையில் கல்வி’ எனும் எண்ணக்கரு வலுப்பெற்று வருவதேயாகும். இதை உணர்ந்த மாணவர்கள் முழு நேரக் கற்றலில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. எனவே, இவர்கள் மிக அதிக நேரத்தை கல்வி நிலையங்களில் செலவிடுவதால் இளம் பருவத்திலேயே ஏராளமான பிரச்சினைகளுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகிறது. குறிப்பாக,

1. பெற்றோரின் அதிஎதிர்பார்க்கை. (High Parental Expectation)

2. பாலினப் பிரச்சினைகள். (Sex Problems)

3. மிகைச் சுமை. (Over load)

4. பரீட்சைப் பீதி. (Exam phobia)

5. ஆரோக்கியப் பிரச்சினைகள். (Health Problems)

6. குறைபடிப்புத் திறன். (Low Study Skill)

போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் சந்திக்கின்றனர். இதனால், மனஅழுத்தம், பயம், சோர்வு, கற்றலில் வெறுப்பு போன்ற சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்கின்றனர். ஆகவே, இவற்றை சரி செய்ய தம்மை முகாமை செய்து கொள்வதோடு ஊக்குவிப்பு (Motive), உளவளத்துணை (Counseling) எனும் கலந்துரையாடி தீர்வு காணும் முறை மற்றும், கற்றல் செயற்பாட்டில் கடும் உழைப்புடன் (Hard Work) கற்பதென்பதை விட வினைத் திறனுடன் (Smart Work) கற்பதன் அவசியம் போன்றன குறித்து மாணவர்கள் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது.

-இஸ்பஹான் சாப்தீன்-
மீள்பார்வை-291 ஆம் இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed