கிம் சி ஹா Kim Chi-ha (1941)
1 min readஇது என்ன அநியாயம்?
நான் செய்த தவறு என்ன ?
நான் களவாடவில்லை
அரசின் தானியங்களை.
என்னை ஏன் நசுக்குகிறீர் ?
ஒருவனையும் நான் கொல்லவில்லை.
ஏன் கை, கால்களுக்கு விலங்கு பூட்டுகிறீர்?
முறிக்கவில்லை நான்
எசசட்டத்தையும் ஓழுங்கையும்.
ஏன் என் கை,கால்களை கட்டிப்போடுகிறீர்?
ஒரு போதும் தவறு செய்யா எனக்கு
இத்தண்டனை எதற்கு?
அரசுக்கு பெரும் தலையிடியாய் அமைந்த ஒரு கவிஞன். மற்றவர்களுடன் தொடர்பு ஏற்படக் கூடாதென தன் சிறையைச் சுற்றியுள்ள சிறைஅறைகள் வெறுமையாக்கப்பட்டு, பத்துக் காவளர்கள் வைக்கப்பட்டு மிகுந்த கண்காணிப்புடன் அடைக்கப்பட்டிருந்தார். இவரது எழுத்தே இதற்குக் காரணம்.
உலக இலக்கியத்துக்கு பெரும் படைப்புக்களை வழங்கிய முதற்தர கவிஞர்களுள் கிம் சி ஹா (Kim Chi-ha) முக்கியமானவர். அவரொரு பத்தி இலக்கியவாதி. தென்கொரிய மக்களின் விடுதலைக்காகவும் ஐனநாயகத்திற்காகவும் பங்களித்த ஒரு கவிஞர்.
இவர் 1941 இல் பெப்ரவரி மாதம் 4ந் திகதி தென்கொரியாவின் மொக்போ பிரதேசத்தில் பிறந்தார். 1961இல் சியொல் தேசிய பல்கலைக்கழகத்தில் (Aesthetics) அழகியல் துறையில் பட்டம் பெற்றார்.
இவரது இயற்பெயர் “கிம் யொனஞ் இல்” (Kim Yong-il). 1963ல் “கிம் சி ஹா” எனும் புனைப்பெயரில் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். ‘சி ஹா’ என்றால் கொரிய மொழியில் ‘பாதாளம’ என்று பொருள். “Evening Story” (Jeonyeok iyagi) எனும் தலைப்பில் Mokpo Literary Journal எனும் பத்திரிகையில் முதல் கவிதையை வெளியிட்டார். 1961 ன் இறுதியில் இவரது “Five Bandits” (Ojeok) வெளியானதோடு இலக்கிய உலகில் உத்தியோகபூர்வமாக கால்பதித்தார். 1971ல் தன்னை கத்தோலிக்கராக அறிவித்தார். இவர் தனது இலக்கியப் பணியை அரசியல், கலை மற்றும் மதம் சார்ந்த செயற்பாடாகவே கணித்தார். கிம் சி ஹாவின் போராட்டம் கொரிய மக்களுக்கு விடுதலையையும் ஜனநாயகத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கான ஒன்றாக மாத்திரம் இருக்கவில்லை. மாற்றமாக, இதன் வழி, ”உலகுக்கு ஒரு மாற்றமும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் கிடைக்க வேண்டும்” என்ற நோக்கும் அதில் இருந்தது.
கி.பி 1960 ஏப்ரல் 19ஆம் திகதி கொரிய புரட்சியுடன் இணைந்து, சியொல் பல்கலைக் கழகத்தின் மாணவனாக இருக்கம் போது அரச விரோத செயற்பாடுகளில் பங்கேற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட போதும் பின்னர் அது மரண தண்டனையாகவே மாற்றப்பட்டது. இருப்பினும், சர்வதேச அழுத்தங்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. எனினும், இவற்றுக்கெல்லாம் கவிஞர் அஞ்சவில்லை. கொரிய மக்களின் விடுதலை போராட்டத்தில் மக்களின் குரல் ஓயாது தொடர்ந்து ஒலிக்க கவிஞர் கிம் சி ஹா முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இவரது கவிதைகளில் தன்னாட்டு மக்களின் குரல் அதிகம் ஒலிப்பதைக் காணலாம். இவரது அரசியல் சார்ந்த கவிதைகள் கேலியும் கிண்டலும் வாய்ந்த நடையைத் தழுவியன. இவரது கவிதைகளில் மக்களின் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை அப்படியே பிரதிபலிக்கிறார். கவிஞர் தன்னாட்டு மக்களின் மீது வெகுவாக நம்பிக்கை வைத்திருந்தார்.
மேலே குறிப்பிட்ட கேள்விகள் நிரம்பிய சோகக் கவிதையை அழுகும் அன்பும் கலந்து இப்படி முடிக்கிறார்.
‘மூங்கில் தாள் அகற்றி
சிறைக்கூடம் வந்தது நிலவொளி,
யுவதி தனிமையில்
இப்படிக் கூறியவளாய்
நிலவை நோக்கினாள்..
‘நிலவே! உனக்கவன்
தெரிகிறானா?
உன் ஒளிரும் முகத்தை
எனக்குக் கொடு!
என்னாலும் பார்க்க முடிந்திடும் அவனை,
சுகமாய் தரை சாய்ந்துள்ளானா?
அன்றி, அமர்ந்துள்ளானா?
நீ கண்டதை சொல் எனக்கு.
பதில் தந்து சோகம் அகற்று!
மனத்தை சாந்தப்படுத்து!
அங்கலாய்பை குறை!
கிம் சி ஹா ஜனநாயக இளைஞர் மற்றும் மாணவ அமைப்பில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரமாகத் திகழ்ந்தார். கொரிய மக்களுக்குத் தகுந்த ஒரு அரசை உருவாக்குவதும் தாய்நாட்டின் சுயாதீனத்தையும் தேசிய நலனையும் பாதுகாப்பதுமே இவ்வமைப்பின் முக்கிய நோக்கங்களாக இருந்தன. அரச யாப்பை மாற்றுவதற்கு இறுதி வரை போராடியது. நாட்டு மக்களை சுபீட்சமாக வாழ வைப்பதற்கான ஒரு பிரயத்தனமாகவே அமைந்தது.
ஏகாதிபத்தியத்திற்கும் சர்வதேச அழுத்தங்களுக்கும் எதிராக 1973 செப்டம்பர் களில் இம் மாணவ அமைப்பு மும்முரமாக தொழிற்பட்டது. அன்று தென் கொரியாவை ஆட்சி செய்த கொடுங்கோல் ஆட்சியாளனான ஜீ சிங் இற்கு எதிராக அவன் மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை ஒரு கவிஞனாக நின்று வெளிப்படுத்துவது கிம் சி ஹா வுக்கு தேவைப்பட்டது. ஆட்சியாளனின் முகமூடியை கிழிக்கவே இந்தப் புரட்சி அமைப்போடு இணைந்து, தியாகத்தோடு செயற்பட்டார். எனவே, இவரது கவிதைகளில் அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
1970களிலேயே இவரது கவிதைகள் ஆங்கிலம், ஜப்பான் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. கிம் சி ஹா தென் கொரியாவில் தோன்றிய மிகச் சிறந்த ஒரு கவிஞர். ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தோன்றிய முன்னணிக் கவிஞர்களுள் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பசி
ஐயோ, என் வயிறு வெறுமையாயுள்ளது.
களை பிடுங்கி
நான் தரை சாய்ந்து
ஊற்று நீரை குடிக்கிறேன்
ஒரு கல்லில் தலைசாய்கிறேன்.
வேர், கிழங்கு நான் சாப்பிடுவது,
களை பூ தவிர்த்து
குப்பை கூழக் கழிவுகளை
விழுங்குகிறேன்.
மின்னும் விஷக் காளான்களையும்..
எனினும் வெறுமயாயுள்ளது
இன்னும் என் வயிறு.
– கிம் சி ஹா –
விருதுகள்.
* The Lotus prize for African and Asian Literature – 1975
* Grand Poet Prize – 1981 at the International Poets Conference.
இவரது படைப்புகள்.
- The Yellow Earth, With a Burning Thirst, South (Nam)
- Love Thy Neighbor 1-2 (Aerin 1-2),
- Black Mountain, White Room (Geomeun san hayan bang),
- A Rain Cloud in These Days of Drought (I gamun nare bigureum),
- My Mother (Naui eomeoni),
- Looking up at a Starry Field (Byeolbateul ureoreumyeo),
- The Agony of the Center (Jungsimui goeroum),
- Rice (Bap),
- Boat Songs of the South Land (Namnyeokttang baennorae),
- Livelihood (Sallim),
- Groundless Rumors (Bieo)
மொழிபெயர்ப்புகள்.
- “Aufgehen der Knospe” (German Language)
- Heart’s Agony: Selected Poems of Chiha Kim (1998)
- Cry of the People and Other Poems (1974)
- The Middle Hour: Selected Poems (1972)
- The Gold-Crowned Jesus and Other Writings (1978)
(உலகக் கவிஞர்கள்-1)