December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

நெல்சன் மண்டேலா – விடுதலைப் போராட்டத்தின் குறியீடு.

1 min read

ஒரு போராளி சிறைப்படுத்தப்பட்டார். அதன்வழி அச்சமூகம் தம் விடுதலைக்காக வீறுகொண்டது. ஒரு மனிதனின் தியாகத்தால் அம்மனிதன் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகம் கண்விழித்துக் கொண்டது. அந்தக் கண்விழிப்பு விடுதலை வரை அவர்களை நகர்த்திச் சென்றது. பல சமூக விடுதலைகள் இப்படித்தான் நிகழ்ந்திருக்கின்றன. இது நிகழ்ந்தது தென் ஆபிரிக்காவில். அந்தப் போரளிதான் நெல்சன் மண்டேலா (1918-2013)

நெல்சன் மண்டேலா – தென் ஆபிரிக்காவின் கருப்பின விடுதலைக்காக போராடிய ஒரு போராளி என்றால் அது தவறு. ‘கருப்பின விடுதலை’ வழியே போராடியது முழுமொத்த மனிதநேய விடுதலைக்கும் என்பதே சரியானது. மண்டேலாவின் 27 வருட சிறைவாசம் பின்னாளில் கருப்பின மக்களுக்கு சுதந்திர வாசத்தைப் பெற்றுக்கொடுத்தது. மட்டுமன்றி சிறுபாண்மையாய் இருந்த வெள்ளை இனத்தினருக்கு சுதந்திர சுவாசத்தையும் பெற்றுக் கொடுத்தது. இதற்கு மண்டேலாவின் இந்த ஒரு வாசகமே போதுமானது.

“ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்குபவர்கள் இருவரிடம் இருந்தும் மனிதத்தன்மை களவாடப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளிவரும்போது, இந்த இருவரையும் விடுவிக்கவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. அதை நாம் அடைந்துவிட்டோம் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை. நாம் இன்னும் முழுமையான சுதந்தரத்தை அடையவில்லை. பயணத்தின் இறுதி இலக்கை இன்னும் நாம் அடையவில்லை. மாறாக, முதல் அடியை மட்டும் எடுத்து வைத்திருக்கிறோம். நம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உதறித்தள்ளுவது மட்டும் சுதந்தரம் ஆகாது. மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் நாம் மதிக்கவேண்டும். மற்றவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக நம் வாழ்க்கை அமையவேண்டும்.” (சிறையில் இருந்தபோது மண்டேலா எழுதிய சுயசரிதை 1994 இறுதியில் The Long Walk to Freedom என்னும் பெயரில் வெளியானது. இந்நூல் தற்போது திரைப்படமாக்கப்பட்டுள்ளது.)

1964 ம் ஆண்டு ஜுன் 12 இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. 27 வருடங்கள் ரோபன் தீவு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டார். தன் வாழ்நாளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதி இப்படிக் கழிய எந்த மனிதன் ஆசைப்படுவான். தன் சமூகத்தின் விடிவுக்காக போராடியதற்காகவே வெள்ளை அரசு அவரை சிறைப்படுத்தியது.

ஆனால், அரசை கவிழ்க்கமுயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனக்காக இப்படி சிறை வாசம் செய்யவில்லை. அப்படி அவர் மாத்திரம் சிறையில் இருந்து விடுதலை பெற நினைத்திருந்தால் எத்தனையோ தடவைகள் அவருக்குக் வாய்ப்புக் கிடைத்தது. விடுதலை பெற்றிருக்கலாம். 1973

இல் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதாவது, டிரான்ஸ்காய் மாநிலத்தில் மட்டும் மண்டேலா வசிப்பதாக இருந்தால் விடுதலை செய்ய வெள்ளை அரசு முன்வந்தது. மண்டேலா அதை நிராகரித்தார். “தமது கறுப்பர் இன மக்கள் முழு விடுதலை கிடைக்கும் வரை எனக்கு விடுதலை தேவை இல்லை” என அறிவித்தார்.

இது சுயநலக் கலப்பற்ற ஒரு போராளியின் தியாக அறிவிப்பு.

தனிமைச் சிறை, சிறையில் கல்லுடைப்பு, சித்திரவதை என இன்னோரன்ன அவஸ்தைகள் ஒரு போராளியின் வேகத்தை குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம். ஆனால், இவைகள் மண்டேலாவின் வேகத்தை தணிக்கவில்லை. இன்னும் இஸ்திரப்படுத்தின. அவரே சொல்கிறார்… “Prison – far from breaking our spirits – made us more determined to continue with this battle until victory was won” (சிறைச்சாலையால் எங்களது உறுதியை, அர்ப்பணிப்பை முறியடிக்க முடியாது. மாறாக இறுதி வெற்றி அடையும் வரை போராடுபவர்களாக எம்மை மாற்றுகிறது.) பயணம் நீண்டதாயினும், சிரமம் நிறைந்ததாயினும் மண்டேலாவுக்கு தன் சமூக விடுதலை ஒன்றே இலக்காக இருந்தது. இதுவே ஒரு உண்மையான சமூக விடுதலைப் போராளிக்கு உதாரணம்.

மகத்மா காந்தியை ஒரு அகிம்சை வழிப் போராளியாக நமக்குத் தெரியும். காந்தியும் வெள்ளையர்களுக்கு எதிராகவே குரல் கொடுத்தார். மண்டேலாவும் அப்படித்தான். மகாத்மா காந்தி வெள்ளையனை மூட்டை முடிச்சுக்களுடன் இந்தியாவை விட்டு வெளியேறுமாறே பணித்தார். ஆனால், வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையில் துன்பத்தை ஏற்றபின், 1990 பிப்ரவரி 11 இல் சிறையில் இருந்து (71 வயதில்) விடுதலை செய்யப்பட்டார். 1993 அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது. 1994 ல் தென்னாப்பிரிக்காவின் அதிபரானார். மண்டேலாவோ அத்தனை கொடுமைகளையும் இழைத்த வெள்ளையனுக்கும் சம உரிமை வழங்கினார். அதே தென்னாபிரிக்காவில் அவர்களையும் வாழ வழிசெய்தார். “நாம் அனைவரும் வெற்றியாளர்கள் தான், தென்னாபிரிக்கா ஒரு வெற்றிபெற்ற தேசம் தான்” என்றே முழங்கினார்.

இப்படியான சுயநலக் கலப்பற்ற ஒரு போராளியின், மனித நேயம் காத்த மனிதனின் மறைவு எனக்குள் ஏற்படுத்திய அதிர்வின் பதிவே இவ் ஆக்கம்.

இஸ்பஹான் சாப்தீன்
(8 December, 2013 @ 12:54:16)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed