December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

குணத்தில் சிறந்த குணசிரி அன்கள்…

மனிதர்களை மனிதர்களாக நம்பிய ஒரு மனிதன். அவர் கடையில் கல்லாப் பெட்டிக்கு பூட்டு இருக்கவில்லை. நம்பிக்கையே பூட்டாக இருந்தது. எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கத் தெரிந்த அவருடைய கண்கள் யாருக்கும் வாய்த்ததாக காணவில்லை.

பெயருக்கு ஏற்றாற் போல் வாழ்ந்து மறைந்த மனிதர்கள் நம்மில் மிக மிக அரிது. அப்படி நான் சந்தித்த மனிதர்களுள் ‘குணசிரி அன்கள்’ மிக முக்கியமான ஒருவர். எப்போதும் நீங்கா நினைவுகளை சுமத்திவிட்டுச் சென்றவர். குணசிரி என்றால் ‘குணத்தில் அழகானவர்’ என்று பொருள். முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அரிதான பல நற் குணங்கள் அவரிடம் காணப்பட்டன. எல்லோரையும் ஒரே பார்வையில் பார்க்கத் தெரிந்த அவருடைய கண்கள் யாருக்கும் வாய்த்ததாக காணவில்லை. இந்த ஒரு பண்பே எல்லார் மனங்களையுங் அவர் பிரிவால் கலங்க வைத்திருக்கிறது போலும்..

‘குணசிரி அன்கள்’ பிரிவை பற்றிய செய்தியை முகப் புத்தகத்தில் கண்ட போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியுவில்லை. கொஞ்ச நேர நினைவற்ற நிலைக்கு பிறகே உணர முடிந்தது. அவர் மாணவர்களுக்கு உதவுவதன் காரணமாக நோய் அவரை அனுகாது என நம்பிக்கையோடு சொன்னவர். அவர் நோய்க்கு மருந்து பாவிப்பதை மறுத்தவர். அதுவாக வந்தது அதுவாகவே போய்விடும் என நோயை இயல்போடு பார்த்தவர். அவர் இறுதிவரை உழைத்துக்கொண்டே இருந்தார். நோய் அவரை அண்டியிருக்கவில்லை. ஆனால், மரணம் வரும் என்றிருப்பின் அது எப்படியும் வரும் என்பது இயற்கை விதி. மாரடைப்பால் மரணித்திருப்பதாக நண்பர்கள் காரணம் சொல்கிறார்கள். எப்படியோ அவர் பிரிவு என்னைப் போலவே அவரோடு பழகிய பெரும்பாலான மனிதர்களை கலங்க வைத்திருக்கும் என்பது உண்மை.

ஜாமியா நளீமிய்யாவின் அழகான இயற்கைச் சூழலுக்கும், அங்கிருந்த மனிதர்களுக்கும் “கடன்” வழங்கியவர் என்றால் அது பிழையில்லை. அதனால் தான் நளீமிய்யா வளாகத்தில் மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ள இரங்கல் பதாகையில் “உங்கள் சேவைக்கு சதாவும் நாம் கடனாளிகள்” என்று எழுதியிருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

பூ மரங்களின் நுனியில் அதிகாலைப் பொழுதில் படரும் பனித்துளிகள் தொட்டு மரத்தின் வேரில் உரமாகிக் கிடக்கும் சருகுகள் வரை அவரை நிச்சயம் தேடும். அவர் பூ மரங்களை கத்தரிக் கோலால் வெட்டி அழகாக்கும் லாவகத்தை அவை சொல்லிக்கொண்டே இருக்கும். நளீமிய்யா வளாகம் பசுமையாகவும், சுத்தமாகவும் இருக்க அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. எரும்புக்குக் கூட அநியாயம் செய்ய நினைக்காதவர். அவருக்கும் ஆயிரம் பிரச்சினைகள், கவலைகள், சந்தோசங்கள் இருந்திருக்கும். அவற்றையெல்லாம் மரங்களிடம்தான் பகிர்ந்திருப்பார். காரணம், அவர், இயற்கையை அதிகம் நேசித்தவர்.

25 வருடங்களுக்கு மேல் ஜாமிய்யாவுக்காக சேவை செய்தவர். பல மனிதர்களை சந்தித்தவர். பல மாணவத் தலைமுறைகளை கண்டவர். அவர் தன் வேலைக்கு மேலதிகமாக ஒரு சிறிய கடையையும் நடாத்தி வந்தார். வாளகத்தில் இருந்த மாணவர்களில் யாரும் அந்தக்கடைக்கு செல்லாமல் இருந்திருக்கமாட்டார்கள். அதனால் அவர் வருமானம் பெற்றார் என்பதை விடவும் மாணவர்கள் பெரிதும் பயன் பெற்றார்கள் என்பதுதான் உண்மை. எந்த நேரத்தில் பசி வந்தாலும், பொருட் தேவை வந்தாலும் குணசிரி அங்களை நாடலாம். அவர் எல்லோரையும் நம்பினார். அவர் கடையில் பூட்டுப்போட்ட கல்லாப் பெட்டியெல்லாம் இருக்கவில்லை. காசா, கடனா என்றெல்லாம் கேட்கமாட்டார். பொருட்களை பெற்றபின் காசாக இருந்தால் கட்டலாம், கடனாக இருந்தால் கொப்பியும், பேனையும் இருக்கும் கணக்கை கேட்டு எழுதிவிட்டு வரலாம்.

என்னை சந்திக்கன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதா கமட கியாத என்று விசாரிக்கும் அந்த குனசிரி அங்கள் இனி இல்லையே..!

அந்தக் கடை, அந்தக் கத்தரிக்கோல், அந்த பூஞ்செடிகள் இன்னும் பல… அவர் நினைவாய் இருக்கும். ஆனால், குணசிரி அங்கள் இருக்கமாட்டார். எப்போதாவது நளீமிய்யா வளாகம் சென்றால் இந்த நினைவுகளை மாத்திரம் இனி பகிர்ந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed