“கிஸ்ஸா”ப் பிரபந்தம்.
1 min readகிஸ்ஸா:
முஸ்லிம் புலவர்களால் தமிழுக்கு வழங்கிய மற்றுமொரு இலக்கிய முறைமைதான் “கிஸ்ஸா”ப் பிரபந்தம். “கிஸ்ஸா – قصة” என்பது அறபு மொழிச் சொல். அறபு மொழியில் கதை, கதை சொல்லுதல்’ என்பதற்கே கிஸ்ஸா எனப்படுகிறது. “கஸஸ்” என்பது இச்சொல்லின் பன்மை. எனவே, கிஸ்ஸா பிரபந்தம் என்பதை, இஸ்லாமிய வரலாற்றுப் போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப் படைப்பாக்கம் என வரைவிலக்கணப்படுத்தலாம்.
கிஸ்ஸாவின் தோற்றம்:
கதை சொல்லலும் கதை கேட்டலும் எல்லாச் சமூகத்திலும் எல்லாக் காலகட்டத்திலும் இருந்து வரும் ஒரு வழக்கம். அறபுலகிலும் இவ்வழக்கம் இருக்காமல் இல்லை. ஓய்வு நேரத்தை “கிஸ்ஸா” சொல்லிக் கழிப்பது அறபு நாட்டு இஸ்லாமியரின் பழக்கமாக இருந்தது. இத்தகைய கதைகள் சமயத் தொடர்புடையனவாயும் படிப்பினைகள் மற்றும் நகைச்சுவைகள் பொதிந்தனவாயும் காணப்பட்டன. கேட்போரை தன்பால் கவர்ந்து மார்க்க போதனைகளையும் வரலாறுகளையும் கேட்போர் மனதில் பதிய வைக்கவே இவ்வகை இலக்கியங்கள் பயன்பட்டன. எனவே, பொதுமக்களும் இவற்றை விரும்பிக் கேட்டும் பாதுகாத்தும் வந்தனர்.
இக் “கிஸ்ஸா”க்கள் தமிழ் பேசும் இஸ்லாமியரிடையேயும் பரவி, முஸ்லிம் தமிழ் புலவர்கள் உள்ளங்களையும் கவர்ந்தன. இதன் பயனாகவே “கிஸ்ஸா”க்கள் தமிழ் மொழியிலும் வெளிவந்தன. (தமிழில் கிஸ்ஸா இலக்கியத்தின் தோற்றகாலம் பற்றிய சரியான பதிவுகள் கிடைக்கவில்லை.) அறபு, உருது, பாரசீகம் போன்ற மொழிகளில் இருந்த கிஸ்ஸாக்களை தமிழ்படுத்தியதோடு மற்றுமன்றி புதிய கதைகளையும் தமிழில் வழங்கினர். தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. (இருப்பினும் என் தேடலுக்கு உற்பட்டவகையில் முடிந்தளவு கீழே தொகுத்துள்ளேன்) இவற்றுள் வடிவில் ‘இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா’ பெரியதாகவும், ‘கபன் கள்ளன் கிஸ்ஸா’ வடிவில் சிறிய கிஸ்ஸாவாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுவர்.
கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கென தனியான இலக்கண வரையரைகள் கிடையாது. அவை செய்யுள் வடிவிலும் உரை நடை அமைப்பிலும் சிலபோது இவையிரண்டும் கலந்தும் யாக்கப்பட்டுள்ளன.
கிஸ்ஸா வகைகள்:
இவற்றின் உள்ளடக்கங்களில் ஆதாரமற்ற செய்திகளே அதிகம் இருக்கின்றன. இருப்பினும், உள்ளடக்க கதைகளின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பகுக்கலாம்.
1.வரலாற்று நிகழ்வுகள் வழி எழுதப்பட்டவை:
கிஸ்ஸாக்களில் பெரும்பாலானவை இந்த வகையை சேர்ந்தவை. அதாவது, இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, இவை வரலாற்றுப்பதிவு இலக்கியங்களாக காணப்படுகின்றன. நபிமார்கள், மகான்கள், பெரியார்கள் வாழ்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை கிஸ்ஸா’வாக இயற்றி பொதுமக்களுக்கு முன்மாதிரி மனிதர்களாகக் காட்டும் வரலாற்றுக் காவிய முயற்சியாகவே இவை அமைந்துள்ளன. இந்த வகைக்கு உதாரணமாக “‘யூசுபு நபி கிஸ்ஸா” வை குறிப்பிடலாம். இந்நூல் யூசுபு நபியின் வாழ்க்கை வரலாற்றினை கூறுகிறது.
2.வரலாற்றுப் புனைவுகளாய் எழுதப்பட்டவை:
இந்த வகையினை வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை. வரலாற்றில் என்றுமே இடம்பெறாத ஒரு நிகழ்வை கற்பனைசெய்து புனைந்து அதன் மூலம் இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப்பட்டவை. இந்த வகைக்கு சைத்தூன் கிஸ்ஸாவை உதாரணமாக கூறலாம். சைத்தூன் கிஸ்ஸா குறிப்பிட்டுள்ளது போன்ற நிகழ்வுகளுக்கு எந்தவித வரலாற்று ஆதாரத்தையும் காணமுடியாது.
சில எடுத்துக்காட்டுகள்:
தமிழில் வெளியாகிய கிஸ்ஸா இலக்கியங்களுக்கு சில எடுத்துக் காட்டுகள் வருமாறு.
1.யூசுபு நபி கிஸ்ஸா:
தஞ்சை, அய்யம் பேட்டை மதாறு சாகிபுப் புலவர் இயற்றிய பெரிதும் புழக்கத்தில் இருந்த ஒரு கிஸ்ஸா இலக்கியம். நபி யூசுப் (அலை) அவர்களது வரலாறு அல்குர்ஆனில் சூறா யூசுபில் இடம்பெற்றிருக்கின்றது. இதனை கதையாக வடித்து தமிழுக்கு வழங்கியதே இந்த யூசுபு நபி கிஸ்ஸா. இறையச்சம், கற்பொழுக்கம் போன்றவற்றை வலியுறுத்துவதாக இக்கதை அமைகிறது. இந்நூல் ஹிஜ்ரி 1170இல் இயற்றப்பட்டது.
2.இசுவத்து நாச்சியாருடைய கிஸ்ஸா:
காயல்பட்டனம் கண்ணகுமுது மகுதூம் முகம்மதுப் புலவரால் வசனரூபமாக எழுதப்பட்டதுதான் இசுவத்து நாச்சியாருடைய கிஸ்ஸா. இது 1865இல் பதிப்பிக்கப்பட்டு வெளியாகிய ஒரு கிஸ்ஸாப் நூல். இசுவா எனும் பெண்ணை கதாநாயகியாய்க் கொண்டு எழுதப்பட்டது இது. கற்பொழுக்கம், தைரியம், புத்திக்கூர்மை என்பவற்றோடு இப்பெண் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ‘இசுவத்து நாச்சியார் சரிதம்’ எனும் பெயரில் சில மூதாட்டிகள் இக்கதையை அறிந்து வைத்துள்ளனர்.
கிஸ்ஸா இலக்கியங்களின் பட்டியல்:
என் தேடலுக்குட்பட்ட வகையில் புழக்கத்தில் இருந்த கிஸ்ஸா இலக்கியங்களின் பட்டியல் கீழே:
• யூசுபு நபி கிஸ்ஸா
• அலி(ரலி) கிஸ்ஸா
• இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
• முகமது அனிபு கிஸ்ஸா
• சைத்தூள் கிஸ்ஸா
• ஷம்ஊன் கிஸ்ஸா
• கபன் கள்ளன் கிஸ்ஸா
• விரகு வெட்டியார் கிஸ்ஸா
• நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா
• தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா
தொடரும்….
(இன்னும் பல எழுதியவர்களின் பெயர்களுடன் இன்னும் உள. சில காரணங்களுக்காக அவற்றை தணிப்பு செய்துள்ளேன்)
இஸ்பஹான் சாப்தீன்
றாபிதா கலமியா-2005
(நூற்றுக்கணக்கான பதிவுகளை ஆராய்ந்த பின் எழுதிய என் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பில் இருந்து இது ஒரு கட்டுரை. எனவே, உசாத்துணைகளை பதிய முடியவில்லை. பதிந்தால் அதுவே ஒரு கட்டுரையாகிவிடும்.)