December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

குழந்தைகள் எனும் ஆசிரியர்கள்.

1 min read

குழந்தைகள் நமக்கு இறைவன் கொடுத்த செல்வங்கள். நமக்கு என்றும் கண்குளிர்ச்சியை வழங்குபவர்கள். உலகுக்குப் புதியவர்கள். நம் பார்வைகளில் எதுவும் அறியாப் பாலகர்கள். எனவே, நாம் அவர்களை யாவும் அறிந்தவர்களாக மாற்ற கற்பிக்க நினைக்கிறோம். இந்த நினைப்பு யதார்த்தமானது. இந் நினைப்பு தவாறானதல்ல. ஆனால், நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க முன் அவர்களைப் பற்றி கற்றிருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் அவர்களுக்கு கற்க வழிகாட்ட முடியும். குழந்தைகளிடம் நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன.

குழந்தைகளே மிகச் சிறந்த ஆசான்கள். எப்படிக் கற்க வேண்டும், தமக்கு எப்படிக் கற்பிக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுத்தரும் ஆசான்கள். ஆனால், அது நமக்குத் தெரிவதில்லை. காரணம், அவர்களை கற்பிக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கு மட்டுமே நம் முன் இருப்பதால் அவர்கள் கற்பிப்பதை நாம் உணர்வதில்லை.

கற்றுக் கொள்வதுபோல் கற்றுக்கொடுக்கும் யுக்தி தெரிந்த ஆசிரியர்கள் குழந்தைகள். அவர்கள் கற்பவர்கள் போல் இருப்பார்கள் ஆனால் நமக்குக் கற்பித்துக்கொண்டிருப்பார்கள். இந்த யுக்தி பெரும்பாலான ஆசிரியர்களிடம் கிடையாது. இந்த குழந்தைப்பண்பு உடைய ஆசிரியர்களே இன்று நம் பாடசாலைகளுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் எப்போதும் நமக்கு எல்லாம் தெரியும் என்கின்ற பாசாங்கான முகத்தையே மாணவர்களுக்கு காட்ட முனைகிறார்கள். இப்படித் தம்மை அடையாளங் காட்டிக்கொள்வதன் மூலம் மாணவர்கள் மத்தியில் “நாம் ஆசிரியர்கள்” என்பதை தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறார்களே தவிர தகவமைத்துக்கொள்ள முனைவதில்லை.

நம் குழந்தைகளிடம், நமக்குத் தெரிந்ததைக்கூட நமக்குத் தெரியாத விடயம்போல் கேள்வி கேட்டு அவர்கள் பதில் சொல்ல, அதில் இருக்கும் பிழைக்கு நெறுங்கியதை சரிக்கு நெறுக்கமாக்கவும் சரிக்கு நெறுங்கியதை சரியாக்கவும் வழிகாட்டுவதே நமக்கு அவசியமாகிறது. இதுவே தற்கால கற்பித்தல் நுட்பம். இதனை நமக்கு குழந்தைகளே கற்றுத்தருகிறார்கள்.

இன்று நம்மைச்சுற்றியுள்ள உலகில் குழந்தைகள் என்போர் அறிவோடும் அறிவியலோடும் பந்தம் வைத்தபடியே பிறந்தவர்கள். அவர்கள் அறிந்து வைத்திருப்பவற்றில் அதிகமானவை நமக்குத் தெரியாதவை. இதனால் தான் இன்றைய கல்வி உளவியலாளர்கள் “கற்போர் கையில் கல்வி” என்று குறிப்பிடுகிறார்கள். “கற்போர் கையில் கல்வி” இருக்கிறது கற்பிப்போர் கையில் தடி இருக்கிறது என்றால் யாரிடம் உள்ளது பிரச்சினை? கற்பிப்போரிடமே உள்ளது பிரச்சினை. ஆசிரியர்களுக்கு குழந்தைகளை பற்றி தெரியாமையும், ஆசிரியர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு தம்மை தகவமைத்துக் கொள்ள முயற்சிக்காமையே இதற்கு காரணம்.

மாணவர்கள் எனும் பொதுப்பெயரும், அம் மாணவர்களின் தனிப்பெயர்களும் மட்டுமே நமக்குத் தெரியும். அந்த அடையாளங்களின் வழியேதான் நாம் நம்மை அடையாளங்காட்ட முனைகிறோம். எப்போது மாணவர்களை மனிதர்களாகவும், பெயர்களை தாண்டி அவர்களை உணர்வுள்ளவர்களாகவும் காண்கிறோமோ அப்போது தான் நாம் யார் என அவர்களுக்குப் புரியும். எனவே, நாம் குழந்தைகளை மிகச்சரியாக அடையாளம் கண்டுகொண்டால் அவர்களாகவே நம்மை ஆசிரியர்களாக அடையாளங் காட்டிவிடுவார்கள்.

Teacher: “Why are u late for class?”

Student: “You know my name not my story!”

இந்தக் கேள்வியும் பதிலும் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கோ, இன்றைய ஆசிரியர்களின் யதார்த்த நிலையை அதிகமாகவே சொல்கிறது. எனவே, நாம் குழந்தைகள் எனும் ஆசிரியர்களிடம் கற்று நம்மை கற்பிப்போராக தகுதிப் படுத்திக்கொள்ள முயல்வோம்.

-இஸ்பஹான் சாப்தீன்-
2013.11.19 பின் மாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed