இருண்ட கண்டத்தில் பற்றி எரிந்த தீ, நமக்கு எதைச் சொல்கிறது..?
1 min readஓர் ஊரிலே, ஒரு நீர் நிலையில் ‘யர்டெல்’ என்ற பெயரில் ஒரு கடலாமை வாழ்ந்து வந்தது. அது, கண்ணுக்குப் புலப்படும் நிலப்பரப்பை தன் ஆட்சிப் பிரதேசமாக மாற்றிக்கொள்ள நினைத்தது. ஒரு கல் மீது ஏறிப் பார்க்காது தன் குடிமக்களான கடலாமைகளைக்கூட்டி, ஒன்றின் மீது ஒன்றை ஏற்றி அவற்றின் மீது தன் சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டது. மிக உயர்ந்த இஸ்தலத்தில் இருந்து பார்க்கின்ற போது அதிகப்படியான பகுதிகள் தென்படும். அப்படித் தென்படும் விசாலித்த பிரதேசத்தை தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவர முடியும் என்பதே இதற்குக் காரணம்.
காலம் செல்லச் செல்ல இவ் ஆட்சிபீடத்தை சுமப்பது மக்களுக்கு கஷ்டமாக மாறியது. அப்போது, அடித்தட்டில் அரசனை தாங்கி நின்ற max எனும் அப்பாவிப் பொதுமகன், தமக்கு தற்காலிகமாகவேணும் ஓய்வு அவசியமென எடுத்துக்கூறியது. அதற்கு அரசனிடம் இருந்து எச்சரிக்கையே பதிலாககக் கிடைத்தது. அதுமட்டுமன்றி, இன்னும் பல குடிமக்களை தன் அரச விஸ்தீரணத்திற்காக ஈடுபடுத்தி அரியாசனத்தை உயர்த்திக்கொண்டே சென்றது.
MAXஇற்கு தாங்கவே முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. தன்னால் அரசனுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய முடியாது என்பதால் தன்னாலான அதிருப்தியை வெளிப்படுத்த எண்ணி சப்தமாக ஏப்பம் ஒன்றை வெளியிட்டது. இந்த MAXஇன் நடவடிக்கையால் நிலைகுழைந்த அதிகாரத்தின் அடித்தளம் பெரும் சப்தத்தோடு சரிந்து விழுந்தது. மட்டுமன்றி அரசனையும் சேற்றில் தள்ளியது.
அமேரிக்க எழுத்தாளர் “தியோடர் கியஸல்” எழுதிய இச்சிறுவர் கதையை வாசித்த உடன் என் மனக்கண் முன் தோன்றியவர் “பூ அஸீஸி”. டியுனீஷியாவில் தீ வைத்து தற் கொடை(கொலை) செய்து கொண்ட இளைஞர்; பூ அஸீஸி. டியுனீஷியாவின் அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன் எதிர்ப்பை வெளியிட்ட முதல் MAX இவர்தான். அதன் பின்னரே டியுனீஷியாவின் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதையில் இறங்கினர். அன்று “பூ அஸீஸி” என்ற இளைஞன் பற்றவைத் தீ ஆபிரிக்கக் கண்டத்தில் ஆட்சி புரியும் ஏனைய சர்வாதிகாரிகளுக்கு எதிராக எரிந்து கொண்டிருக்கிறது.
டியுனீஷியாவில் ‘பின் அலியை’ எகிப்தின் ‘ஹுஸ்னி முபாரக்கை’ லிபியாவின் ‘கடாபியை’ விரட்டிய இத் தீ இன்னும் அணையவில்லை. இன்றும் பரவிக்கொண்டே இருக்கிறது.