சப்தங்களின் அதிகாரம்.
1 min read‘அதிகாரம்’ குறித்து அதி காரமாக அலசியாயிற்று. ‘அதிகாரதிற்கு எதிரான குரல்’ பல அதிகார பீடங்களையும் கேள்விக்கு உட்படுத்தியது. அது, ஒரு வகையில் அநுகூலமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. பின்னரான உரையாடல்கள் ‘அதிகாரக் கட்டவிழ்ப்பு’ என்ற பெயரில் ஆரம்பமாயின. இதுவும் ஒரு வகையில் வரவேற்கத்தக்க விளைவுகளை சமூக மட்டத்தில் ஏற்படுத்தின. ஆனால், எந்த ஒரு மனித சிந்தனையும் மிகத்தீவிரமாகப் பின்பற்றும், அத்துமீறிய ஒரு குழு தோன்றுவது வரலாறு கண்ட உண்மை. இச் சிந்தனையும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘அதிகாரக் கட்டுடைப்பு’ என்கின்ற பெயர் தாங்களில் தீவிர சிந்தனையாளர்கள் இதன் பின்னர் உருவானார்கள். இவர்களின் பேசு தளங்களில் பெரும்பாலானவை இயல்பிற்கு முரணானவையாகவே இருக்கின்றன என்பது மத்திம அல்லது நடுநிலை சிந்தனையாளர்களின் அவதானம்.
அதிகாரம் குறித்து பலரும் பலவாராக பேசிய போதிலும் மத்திம சிந்தனைத் தளத்தில் நின்று உரையாடுவதே தகுந்த பலனைத் தரும். அதிகாரத்திற்கு எதிராக பேசுகின்றவர்கள் மனித இயல்பிற்கும் இயற்கை விதிகளுக்கும் முரணாகாமல் பேசுகின்ற போது அது, சிறந்த சிந்தனையாகப் பரிணமிக்கும்; தகுந்த வரவேற்பை பெறும்; யதார்த்தத்திற்கு நெருங்கியதாக இருக்கும். இஸ்லாம் சகல விடயங்களையும் சிந்தனைகளையும் நடுநிலையாகவே பார்க்கின்றது. இஸ்லாம் இயல்புக்கு ஏற்ற மார்க்கம். இஸ்லாம், அதிகாரம் குறித்துப் பேசும் போதும் மத்திம தளத்தில் இயங்குவதைக் காணலாம்.
எது எவ்வாறிருப்பினும் நுண் அதிகாரங்களில் ஒன்றான சப்தங்களின் அதிகாரம் குறித்ததே இக் கட்டுரை. நுண் அதிகாரம் (Micro Power) என்பது வெளித் தோற்றத்தில் அதிகாரமாகப் புலப்படாது அதிகாரத்தின் பண்புளை உடபொதிந்திருப்பதனைக் குறிக்கும். ஆழ்ந்து அவதானிப்பின் அது அதிகாரம் எனப் புரியும்.
சப்தங்களால் அதிகாரம் செலுத்த முடியுமா? முடியும். இங்கு ‘சப்தம்’ என்பதன் வழி ‘ஒருவரின் உயர் தொணியையே’ அடையாளப்படுத்துகிறேன். எல்லாச் சப்தங்களும் அதிகாரமாகாது. ஆனால், பெறும்பாலான சப்தங்கள் அதிகாரம் என்ற வட்டத்துள் அடங்கிவிடும்.
சமூக உறவுகளில் உரையாடல்கள், ஆலோசனைகள், உபதேசங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றின் போது ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்த முடியும். அவ்வாறு அதிகாரம் செலுத்துவது எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்துமே தவிர எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்தாது. இருவர் உரையாடுகையில் தண்டவாளங்கள் போல் இருக்க வேண்டும். ஒருதண்டவாளம் உயர்ந்தால் ரயில் கவிழ்ந்து விடும்.
தகுந்த காரணமின்றி ஒருவர் தன் குரலை மற்றவர் முன் உயர்த்தி சப்தமாக பேசுகிறார் என்றால்………..
1. குறித்த நபரை அல்லது குழுவை அடக்க முனைகிறார்.
2. குறித்த நபரின் அல்லது குழுவின் கருத்தை , நபரை அங்கீகரிக்க தயாரில்லை.
3. தற்சார்புக்கருத்துக்கு போலி வலு சேர்க்க முனைகிறார்.
4. தற்சார்புக்கருத்தை திணிக்க முனைகிறார்.
என்ற முடிவுகளுக்கே வரவேண்டும்
1. குறித்த நபரை அல்லது குழுவை அடக்க முனைகிறார்.
தன் குரலை உயர்த்தி கதைப்பதின் ஊடாக (அதிகார தோரனை என்பர்) ஒருவரை அடக்கமுடியும். தன்னை விட வலிமை குறைந்த ஒருவரை பயங்கொள்ளச்செய்வதின் மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைகிறார். இதனூடாக தொடர்ந்து தன் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும் தன் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் விளைகிறான். உண்மையில் இது மோசமான பண்பாகும். நபி (ஸல்) அவர்கள் மிகச்சிறந்த தலைவராக இருந்தார்கள். ஆனால், யார் மீதும் அதிகார தோரனையில் கதைத்தது கிடையாது. மக்களால் அதிகமதிகம் நேசிக்கப்பட்டார்கள். காரணம், சப்தமிட்டு யாரையும் வேலை வாங்கியது கிடையாது. சப்தமிடுவது எப்படியிருந்தாலும் தன் பணியாளரிடம் மிக வித்தியாசமாகவே நடந்திருக்கிறார்கள்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) சொல்கிறார்கள். நபி(ஸல்) அவர்களிடம் 10 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்றோ இப்படி நீங்கள் செய்திருக்கக்கூடாதா? என்றோ ஒருபோதும் கேட்டது கிடையாது. எவ்வளவு அற்புதமான முன்மாதிரி.
சில சந்தர்ப்பங்களில் ‘குரலை எழுப்புவது’ தேவையாகும். அங்கு அதிகாரம் என்பது ‘சீர்படுத்தலாக’ மாறுகிறது. யுத்தகளங்களில் அநீதியை அடக்க, குடும்பத்தில் குழந்தை மனைவியை சீர்படுத்த வேறு வழியில்லை என்கின்ற நேரத்தில் நிறுவன ஒழுங்குகளை சீர்படுத்த முடியாத போது கடைசித்தீர்வாக என சில சந்தர்ப்பங்களில் குரலை உயர்த்திப்பேசுவது கட்டாயமாக மாறுகிறது.
2. குறித்த நபரின் அல்லது குழுவின் கருத்தை , நபரை அங்கீகரிக்க தயாரில்லை.
தன் கருத்தை விட மற்றவர் சொல்லும் கருத்து சரியாக அல்லது சிறந்ததாக இருந்தாலும் அதனை அங்கீகரிக்க தயாரில்லாமலோ, தான் இரண்டாம் நிலைக்கு சென்றுவிடுவேனோ என்ற அச்சத்தில் அல்லது தன் (கருத்துதான்) நிலைப்பாடுதான் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற தோரணையில் குரலை உயர்த்திச் சொல்வது ‘அதிகாரமாக’ மாறும். எல்லோரும் தான் மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எண்ணுவது மனித இயல்பு. மற்றவர் கருத்தை அங்கீகரிக்கா விட்டாலும் சொல்பவரை அங்கீகரித்து அவர்கருத்தை கேட்க முனைய வேண்டும். இவ்வியல்புக்கு முரணாக இவர் குரல் எழுப்பி முதல்லயே அடக்க முனைகிறார் என்றால் அது தவிர்க்க முடியாமல் அதிகார அமைப்பை பெற்றுவிடுகிறது.
ஒரு முறை, பனூதமீம் கோத்திரத்தினர் நபி(ஸல்) அவர்களை சந்திக்க வந்தபோது, அபூபக்கர்(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்களும் அக்கோத்திரத்தில் ஒருவரை தலைவராக தெரிவு செய்ய முடிவுசெய்கின்றனர். இந்நேரத்தில் அபூபக்கர்(ரலி) ஒருவரை பிரேரிக்க, உமர்(ரலி) மற்றொருவரை பிரேரிக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே இருவரும் தத்தம் தெரிவு சரியென உரத்த குரலில் கதைத்து உறுதிப்படுத்திக்கொள்ள முனைகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ் நபி(ஸல்) முன்னிலையில் உயர்ந்த தொணியில் கதைக்க வேண்டாம் என்று வஹி அறிவிக்கிறான்.
அவர்கள் மெதுவாக முடிவெடுத்திருக்கலாம். ஆனால், இங்கே, இருவரும் தத்தம் கருத்தை பலப்படுத்தவே குரலை உயர்த்தி கதைக்கின்றனர். இது அதிகாரமன்றி வேறென்ன? ஒருவர் தன் கருத்தினால் மற்றவரை மிகைக்கவே முனைகிறார். (ஹுஜ்ராத் -02,03)
இவ்வாறான சந்தர்ப்பங்களில், நான் சரி ஆனால் நீ பிழையில்லலை என்று கூறி அவரின் கருத்தையும் அங்கீகரிக்க வேண்டும். அதுவே அதிகாரமற்ற போக்கு. இதனால் தான் சில அறிஞர்கள் தர்க்கம் புரிவதை தடைசெய்திருக்கிறார்கள்.
3. தற்சார்புக்கருத்துக்கு போலி வலு சேர்க்க முனைகிறார்.
தன் பக்கம் ஆதாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் தற்சார்புக் கருத்தை பலப்படுத்த குரலை உயர்த்துவதுதான் தகுந்த வழியென்று சிலர் நினைக்கின்றனர். இதன் மூலம் எதிராளியை பயன்கொள்ளச் செய்து தன்னால் அவரை அடக்கிக்கொள்ள முடியும் என்பதே இவர்களின் எண்ணம். இதுவும் அதிகாரத்தின் ஒரு வடிவமே. ஆதாரமற்ற குறையை நிரப்பும் அதிகாரம் என்று இதனைக்கூறலாம். விவாதங்களில், குறை மறைப்புச் சண்டைகளில், சிலபோது உயர் தொணியில் பேசுவது எதிர் தரப்பை பலவீனப்படுத்தும் என்பது இவர்கள் நினைப்பு. ‘சப்தமிடும் மேளத்தில் இருப்பது வெறும் காற்றுதான்’ எனின், இங்கு சப்தமிடுவது அதிகாரம் செலுத்துவதற்காக அன்றி வேறெதற்கு?
4. தற்சார்புக்கருத்தை திணிக்க முனைகிறார்.
பல மனிதர்கள் உள்ள இடத்தில் ஒருவர் உச்ச தொனியில் கதைக்கிறார் என்றால் தன் கருத்தைத் திணித்து தன் பின்னால் வர வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே என்றால் பிழையல்ல “இதனை” கருத்தேற்றம்” என்றும் கூறலாம். அரசியல்வாதிகள் இந்த வகை உத்தியையே கையாள்கிறார்கள். எதுவமே அற்ற சப்தங்களால் அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை அமைச்சர்களைப் பார்ப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம். கருத்துக்களை வாக்களார்கள் விரும்பாமலேயே திணிப்பது இந்த உயர் சப்தம் தான் அல்லது வேறு விதமாகக் கூறுவதானால் வாக்குக் கொடுத்து வாக்குப் பெறும் சப்த அதிகாரம் இதுவே. சத்தமாகச் சொல்வி தன் கருத்தை உண்மையென நம்ப வைப்பது “அதிகாரத்தின்” இன்னொரு வடிவமே.
ஆனால், ராணுவம், உரைகளில் சில உணர்ச்சிபூர்வமான “சத்தியத்தை” சொல்லும் சந்தர்ப்பங்கள், செயற்கைக் களங்களான விவாத மேடைகள் போன்ற சந்தர்ப்பங்களில் குரலை உயர்த்த வேண்டுமென்றிருப்பின் உயர்த்துவது “அதிகாரம்” ஆகாது. இயல்பிலேயே ஒருவர் சத்தமாகத்தான் பேசுகிறார் என்றால் அதுவும் அதிகாரமாக மாறாது. சிலபோது “சப்தம்” சூழலைக் கூட அதிகாரம் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, தகுந்த காரணமின்றி சத்தத்தை உயர்த்துவது அதிகாரிகமான ஒரு செயலாகும் என்பதில் இரு கருத்துக்கு இடம்பாடில்லை. அப்படி ஒருவர் தொனியை உயர்த்துவராக இருந்தால் மேற்கூறிய 04 காரணங்களுக்காக என்றே முடிவெடுக்க வேண்டும்.
இஸ்லாம் சப்தமாக பேசுவதை எதிர்க்கின்றது. அல்லாஹ் அல்குர்ஆனில் சத்தம் போட்டுப் பேசுவது கூடாது என்று கூறுகிறான். அது அதிகார தோரணையென்றும் குறிப்பிடுகிறான். பொறுமையற்றவன் தன் கட்டளை உடனே நிறைவேற வேண்டும் என்பதற்காகவே குரலை உயர்த்துவதாகக் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் வீட்டு முன் வந்து நாட்டுப் புற அறபி ஒருவர் நபியை உயர்தொனியில் அழைத்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ் வஹி அறிவிக்கிறான். இப்படியாக..
“நபியே! நிச்சயமாக (உம்முடைய) அறைகளுக்குப் பின்னாலிருந்து சப்தமிட்டு உம்மை அழைக்கின்றாகளே அத்தகையோர் அவர்களில் பெரும்பாலோர் (உம்மை அழைத்துப் பேசும் முறையை) விளங்காமாட்டார்கள்”.
“நிச்சயமாக அவர்கள் அவர்களிடம் நீர் வெளியேறிவரும் வரையில் பொறுமையோடு இருந்திருப்பீர்களானால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருந்திருக்கும். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். மிகக் கிருபையுடையவன். (ஹுஜ்ராத் : 4.5)
லுக்மான் (அலை) தன் மகனுக்கு உபதேசித்ததைப்பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது…
“உன் சப்தத்தையும் தாழ்த்திக் கொள்வாயாக! (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தமாகும்” (லுக்மான் :19) என்று உபதேசிக்கிறார். உபதேசிக்கும் போது தாழ்மையாக ”எனதருமை” மகனே என்றே விழிக்கிறார்.
எனவே “சப்தங்களின் அதிகாரம்” குறித்த நடுநிலையான பார்வை நமக்கு அவசியமாகிறது அமை விளக்கவே இச் சிறு முயற்சி.
இஸ்பஹான் ஷாப்தீன்,
2010.12.24
தட்டச்சு உதவி: ஸாஜித்