எம் பூர்வீகத்தை இனி அரசே பாதுகாக்கும்!
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று எழுதுகையில் மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ஒரு இடம் ஹஜ்ஜுவத்தை. கச்சுவத்தை என மருவியுள்ளது இப்பெயர். இலங்கையில் இருந்து மக்கள் ஹஜ்ஜுக்கு சென்றது இங்கு இருந்து தான். ‘காலிஹ்’ நங்கூரமிட்டு கப்பல் கட்டும் இடம்.
காலிஹ், ஹஜ்ஜுவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் காலி மக்களின் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பக் குடி ஆரம்பமான இடம் என வரலாறு கூறி நிற்கிறது. பாடசாலையில் கற்கின்ற காலத்திலேயே பல்வேறு நபர்களை சந்தித்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று தகவல் திரட்டினேன்.
ஆனால், சுனாமிக்குப் பின் தான் மிகத் தீவிரமாக காலி முஸ்லிம்களின் வரலாற்றை எழுதவேண்டும் என்ற நோக்கில் தகவல் திரட்ட ஆரம்பித்தேன். அப்போது பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதில் முக்கியமான ஒன்றுதான் காலி என்ற பெயர் வந்த விதம் குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன என்ற விடயம்.
அடுத்தது, ஹஜ்ஜுவத்தை. ஹஜ்ஜுவத்தையில் கிடைக்கப்பெற்ற மீஸான் கல் இலங்கையில் கிடைத்த மீஸான் கற்களிலே மிகப் பழமையானது. இது குறித்து மர்ஹூம் மக்கீன் அன்ஸார் அவர்கள் எழுதியுள்ளார்கள். இந்த மீஸான் கல் சிரிது காலம் காலி, சோலை ‘கொத்துவாப் பள்ளி’ என அழைக்கப்படும் ஜும்மாஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது.
பின் அது தொல்பொருள் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாக மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களுடன் ஒருமுறை கதைக்கும் போது உறுதிப்படுத்தினார். கடந்த சில மாதங்களாக பலரும் அழைப்பெடுத்து ஹஜ்ஜுவத்தை பற்றி தகவல் இருந்தால் தருமாறு கோரினர். என் கைவசம் இருந்த சில தகவல்களை மாத்திரம் வழங்க முடிந்தது.
ஆனால், சில தகவல்கள் உள. அவற்றை விஞ்ஞான பூர்வமான ஒரு ஆய்வாக கொணர முடிந்தால் இவ்வளவு காலமும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறாக கூறிவரும் விடயங்கள் சிலபோது மீள் பரிசீலனைக்கு உட்படக் கூட வாய்ப்புள்ளது. ஹஜ்ஜுவத்தை பள்ளிவாசல் அப்பாஸியக் காலக் கட்டடக் கலைக்கு முந்தியது.
ஆரம்பகால பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டிய குடியிருப்புகளை ஆய்ந்த பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்ற ‘கிட்டங்கி’ அமைப்பு முறைக்கு இந்த கச்சுவத்தை பள்ளிவாசலின் அமைவு முன் மூலமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில் தொல்பொருள் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் தற்போது இது சாத்தியமாகி இருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. நாம் கச்சுவத்தையில் வாழ்ந்த பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. நாம் ஏன் கச்சுவத்தையில் இருந்து வெளியேறினோம். ஏன் கச்சுவத்தையில் முஸ்லிம் குடியிருப்புகள் இன்று இல்லை என்பதற்கு ‘யொன்கல’ சாட்சி கூறும்.
எம் பூர்வீக வரலாற்றிடத்தை இனி அரசே பாதுகாக்கும்.
இஸ்பஹான் சாப்தீன் 20.11.2023