எல்லாவற்றுக்கும் அதற்கே உரிய ஓர் அளவு உண்டு.
எனக்கு பலரும் இந்த செய்தியை அனுப்பி இருந்தனர். உடன் பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை. மிக நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என எண்ணியிருந்த ஒரு விடயத்திற்கு பீடிகையாகவே நான் இந்த செய்தியை எடுத்துக் கொள்கிறேன்.
பெண்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அதேபோல் ஆண்களும் கௌரவிக்கப்பட வேண்டும். திறமையானவர்கள் சமூகத்துக்கு அடையாளம் காட்டப்பட வேண்டும். ஆணோ, பெண்ணோ அவரவரின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட வேண்டிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். திறமைகள் சமனாகவே பார்க்கப்பட வேண்டும். வாய்ப்புகள் சமனாகவே கொடுக்கப்பட வேண்டும். இதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து கிடையாது.
இன்று பல பெண்கள் சாதித்து வருகிறார்கள். பல ஆண்களும் சாதித்து வருகிறார்கள். சமூகத்துக்கு அடையாளம் காட்டப்பட வேண்டிய பல திறமையான பெண்கள் இருக்கிறார்கள். பல ஆண்களும் இருக்கிறார்கள். எல்லாத் துறையிலும் இதனைக் காணலாம்.
கவலைக்குரிய விடயம், அநியாயங்கள் நியாயமாகவும் நியாயங்கள் அநியாயமாகவும் பார்க்கப்படுகிற ஒரு சமூக சூழலில் வாழ்கிறோம். அங்கீகரிக்கப்பட வேண்டிய, சமூகத்துக்கு அடையாளம் காட்டப்பட வேண்டிய ஆளுமைகள் பலர் இன்று திட்டமிட்டோ, சுய லாபங்களுக்காகவோ, அறியாமையினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அடையாளம் காட்டப்படாமல், உரிய இடம் வழங்கப்படாமல், பொதுச் சபைகளில் விழிக்கப்படாமல் மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருகிறார்கள்.
மறுபுறம், திறமையற்ற, எந்தவித தகுதி நிலையுமற்ற பலர் கொண்டாடப்படுகிறார்கள். கௌரவிக்கப்படுகிறார்கள். ஊடகங்களால் அழைக்கப்பட்டு, பொதுச் சபைகளில் மேடை ஏற்றப்பட்டு, முன் வரிசை வழங்கப்பட்டு, முகஸ்துதித்து, மாலையிட்டு பிரபலமாக்கி விடுகிறார்கள்.
கவிதையே இல்லாததைக் கவிதை எனப் புகழ்வதும், எழுத்துப் பிழைகள் நிரம்பியவற்றை, கவித்துவமற்ற எழுத்துக்களை இலக்கியவாதிகள் எனச் சொல்லும் (சிலர்) புத்தகமாக்கிக் கொடுப்பதும், வெளியீட்டு விழா எடுத்தும், வெளி உலகுக்கு அழைத்து வந்து பதக்கம் குத்தி பிரபலமாக்கி விடுவதும் என அண்மைக்காலமாக நிறையவே காண்கிறோம்.
(ஒரு சிலர்) தாமே இலக்கியவாதிகள் என எண்ணி தமக்கு ஜால்ரா அடிப்போரை, அதுவும் பெண்ணாக இருந்தால் அவர்களை திறமை இல்லாவிட்டாலும், (திறமையுள்ளவர்களை புறந்தள்ளிவிட்டு) துதி பாடுகிற நிலை கண்டு பல தடவை சிரித்து விட்டு நாம் நகர்ந்திருக்கிறோம். இலக்கிய உலகில் நடக்கும் இப்படியானவை சில உதாரணங்களே.
தமக்குத் தாமே சில அடைமொழிகளை வைத்துக் கொண்ட (ஒரு சிலர்) தம்மை விட்டால் ஆளில்லை என்கிற நிலைக்கு மாற்றிவிடுகிற (சில) சமூக ஊடகப் பயனர்கள் இனியாவது கொஞ்சம் சிந்திப்பார்களாயின் இந்த அநியாயம் நடக்காது. வாழ்த்துக்கள் என்ற வார்த்தையும், விருப்புக் குறியீடும் நியாயம் உள்ளதாக பயன்படுத்தப்படுமாயின் சில அநியாயங்கள் நடக்காது.
காசு கொடுத்து கௌரவப் பட்டங்களும் விருதுகளும் வாங்கிக் கொள்கிறவர்களும், கொடுத்துக் கொள்பவர்களும் தம் மனசாட்சியை கொஞ்சம் தொட்டுப் பார்த்தால் சில அநியாயங்கள் நடக்காது. பன்னாடைகளுக்கு பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து பண்பட்டவர்களை பொன்னாடை போர்த்துகிற நிலை வருமாயின் சில அநியாயங்கள் நடக்காது.
சிலருடைய கண்களுக்கு திறமையான பெண்கள் தெரிவதே இல்லை. இப்படியானவர்களின் கண்களுக்கு ஆணாக இருந்தால் படுவதே இல்லை.
குறிப்பாக மூன்று துறைகளில் இந்த அநியாயத்தை நாங்கள் காண்கிறோம். இலக்கியம், ஊடகவியல் மற்றும் சமூக சேவை. இந்த மூன்று துறைகளிலும் தகுதியானவர்கள் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
திறமையான பெண்களை விட, திறமையான ஆண்களை விட, திறமையற்ற பெண்களே முன்னுரிமைப்படுத்தப்படுகிறார்கள். ‘நீங்கள் பெண்ணாக இருந்தால் மட்டும் போதும்’ எமக்கு இருக்கின்ற பெயரை வைத்து, பிரபலத்தை வைத்து, எமக்குப் பின்னால் ஜால்ரா அடிக்கின்ற கூட்டத்தை வைத்து, எதுவும் செய்து உங்களை பிரபலமாக்கி விட முடியும் என்கிற ஒரு வகையான மனோநிலை (சில) பிற பலங்களைத் தொற்றி இருக்கின்றது.
பெண்கள் வலுவூட்டப்பட வேண்டும். சமமாக பார்க்கப்பட வேண்டும். திறமைகள் இருப்பின் தகுந்த வரவேற்பு வழங்கப்பட வேண்டும். திறமையற்றவர்களை, தகுதியற்றவர்களை (தகுதியான, திறமையானவர்கள் இருக்கின்ற போதேனும்) ஊதிப் பெருப்பிப்பதை தவிர்க்க வேண்டும். திறமையானவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும், அவர்களுக்கான தகுந்த அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். அது ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம். இங்கே திறமைக்கு பாலினம் ஒரு தடையல்ல.
“பெண்ணாக இருந்தால் போதும் திறமை இல்லாவிட்டாலும் ஊதிப் பெருப்பிக்கிறார்கள். சமூக ஊடகங்களை பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நாம் மரியாதை செலுத்துகின்ற பலரும் இப்படியே நடந்து கொள்கிறார்கள். அவர்களை நாம் இப்படி நினைக்கவில்லை. பல தகுதியானவர்கள் இருக்க, பல திறமையானவர்கள் இருக்க, தகுதியற்ற பெண்கள் கௌரவிக்கப்படுகிறார்கள், இல்லாதவை எல்லாம் சொல்லி புகழ்கிறார்கள். இவற்றை எழுதினால், “ஒட்டுமொத்த பெண்களையும் குறைசாற்றுகிறார்கள்” என்றும், “ஆணாதிக்கவாதிகள்” என்றும், “காழ்ப்புணர்ச்சி” என்றும் (விடயத்தை சரியாக கிரகிக்காமல், புரிந்து கொள்ளாமல்) நம்மை முத்திரை குத்தி விடுவார்கள். எனவே, இவற்றை பொதுவெளியில் எழுத முடியவில்லை.” என இந்த விடயம் குறித்து கடந்த பல வருடங்களாக பல சகோதரர்கள், பல சந்தர்ப்பங்களில், பல கூட்டங்களில் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளில் அங்கலாய்த்திருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்தே இதை எழுதியுள்ளேன்.
தகுதியானவர்களை தாராளமாக கௌரவிக்கலாம்! திறமையானவர்களுக்கு முடியுமான அளவு வாய்ப்பளிக்கலாம்! திறைமையற்றவர்களை திறமையானவர்களாக மாற வழிகாட்டலாம்! தகுதியற்றவர்களை தகுதியான நிலைக்கு மாற்ற கைகொடுக்கலாம்! இதற்கு மாற்றமாக நடப்பதையும், நடத்துவதையுமே இங்கு கூறியுள்ளேன்! இங்கு நடக்கும், நடக்க இருக்கும் நல்லவற்றை, ஆக்கபூர்வமானவற்றை இல்லாமல் ஆக்குவதை நான் செய்தாலும் கூட அது அநியாயமே. ஊக்கமளித்தல் என்பதும் ஊதிப் பெருப்பித்தல் என்பதும் ஒன்றல்ல. வேறு.
‘அது அதை அதற்குரிய இடத்தில் வைத்துப் பார்ப்பதுவே நியாயம், அது அதை அதற்குரிய இடத்தில் வைக்காமல் பார்ப்பதுவே அநியாயம்.’ என நியாத்துக்கும் அநியாயத்துக்குமான விளக்கமாகக் காண்பவன் நான். நீங்கள் எப்படியோ தெரியவில்லை.
இஸ்பஹான் சாப்தீன்,
ஊடக பயிற்றுவிப்பாளர். 22.11.2023