December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

AI News Presenters – செயற்கை நுண்ணறிவு செய்தி முன்வைப்பர்கள்.

1 min read

திரையில் செய்தி வாசிப்பு, செய்தி முன் வைப்பு என்பது ஒரு கலை. ஒரு விஞ்ஞானம். இது பயிற்சியின் வழியாக மெருகேறுகிறது. அதனோடு சுய நடையை உருவாக்கிக்கொள்கிற போது முன்வைப்பர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் தனி அடையாளம் கிடைக்கிறது.

வழக்கமாக இவர்கள், செய்தி ஆசிரியர்கள் எழுதிக் கொடுப்பதையே வாசிப்பர். அது முன்னர் தாள்களில் பிரதி செய்தி கொடுக்கப்பட்டது. தாள்களைப் பார்த்து உடன் கெமராவைப் பார்த்து வாசிப்பர். ஆனால், தற்போது தொலை உரைகாட்டிக்கு அனுப்பப்படுகிறது. அது வாசிப்பவரின் கண் மட்டத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் அதில் வருவதை அப்படியே வாசிக்க முடியும். திடீரென திரை இயங்க மறுத்தாலோ அல்லது வேறு ஏதும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ சமாளிப்பதற்காக கையிலும் ஒரு பிரதி கொடுக்கப்படுகிறது.

அதேபோல், செய்தி முன் வைப்பர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான முக்கிய விடயங்கள் பிரதியாக கையிலும், தொலை உரைகாட்டிக்கும் அனுப்பப்படுகிறது. மேலதிக விடயங்கள் செய்தித் தயாரிப்பாளர்களின் மூலம் காதுக்குள் அறிவுறுத்தப்படுகிறது. இவையே வழமை.

ஆனால், AI செய்தி முன்வைப்பர்களுக்கு (AI News Presenters) இந்த எந்த முறைகளும் கிடையாது.

AI செய்தி முன்வைப்பர்கள் என்றால் யார்? முதலில் இந்தக் கேள்வியே பிழை. செய்தி வழங்குவது எது என்று தான் வரவேண்டும். இருப்பினும், இலகுக்காக உயர்திணையைப் பயன்படுத்துகின்றேன்.

AI செய்தி முன்வைப்பர்கள் தோன்றி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. 2018 இன் பிற்பகுதியில் சீனாவின் அரசு நடத்தும் Xinhua செய்தி நிறுவனம் உலகின் முதல் AI செய்தி முன்வைப்பரை அறிமுகமப்படுத்தியது.

AI செய்தி முன்வைப்பர்கள் மனித குரல், முக பாவனைகள் மற்றும் அசைவுகளை பிரதிபலிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இதற்கு, இயந்திர கற்றல் எல்கொரிதம் (Machine Learning Algorithm) முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக ஒரு AI செய்தி முன்வைப்பரை மனிதனில் இருந்து வேறுபடுத்துவது கடினம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. BBC போன்ற உலகெங்கிலும் உள்ள பிற செய்தி நிறுவனங்களும் AI செய்தி முன்வைப்பர் முறையை பரிசோதனை செய்துள்ளன.

AI செய்தி முன்வைப்பர்களின் பணி மனித செய்தி முன்வைப்பர்களைப் போலவே வழங்கப்படுகின்ற செய்திகளை பார்வையாளர்களுக்குப் படித்து வழங்குவதாகும். ஆனால், மனிதர்களைப் போலல்லாமல், அவை செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகின்றன.

AI செய்தி முன்வைப்பர்கள் 24/7 செயல்பட முடியும். குறைந்தபட்ச மனித ஈடுபாடே தேவை என்பதால் செலவும் குறைவு. முக்கிய மற்றும் தினசரி செய்திகளை வழங்கவும் முன் பதிவு செய்யப்பட்ட செய்தி அறிக்கைகளை வழங்கவும் இம்முறை பயன்படுத்தப்படலாம்.

இதனால், உலகம் தழுவிய செய்தி வழங்கல் சேவை ஒன்று உருவாகவும் வாய்ப்புள்ளது. காரணம், 24/7 இயங்கக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால் களைப்பு கிடையாது. ஓய்வு அவசியமில்லை. ஒரு மொழியில் செய்தியை வழங்கினால் போதுமானது பல மொழிகளிலும் மொழிமாற்றி முன்வைக்க முடியுமான வசதி இப்போது உண்டு. இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.

தரவுகளை வைத்து வரைபுகளை வரைந்துகொள்ளும் தன்மை, தரவுகளை பகுப்பாய்வு செய்யும் தன்மை, கொடுக்கும் தகவலை வைத்து இணைய வெளியில் அது தொடர்பான ஏனைய பல்லூடகத் தயாரிப்புகளை இழுத்து வந்து குவிக்கும் தன்மை என மேலதிக வேலைகளையும் கூட செய்து கொள்ள முடியும்.

அதையும் தாண்டி, செய்தி ஆசிரியர்கள், செய்தித் தயாரிப்பாளர்களின் வேலையைக்கூட AI செய்தி முன்வைப்பர்கள் மேற்கொள்ளலாம். ஆனால், செய்தியின் உண்மைத்தன்மை, துல்லியம், நடுநிலை, நம்பகத்தன்மை என்பன தொடர்பில் கேள்விக்குறியே நிலவுகிறது. ஊடகத்துறையைப் பொருத்தவரையில் இவையே அடிநாதம். எனவே, இப்போதைக்கு அந்த வகிபாகத்தை அதாவது செய்தி எழுதுதல் மற்றும் தயாரித்தலை மனிதர்கள் செய்து கொடுப்பதே பொருத்தமானது. எதிர்காலத்தில் சிலபோது சாத்தியமாகலாம்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் “குவைத் செய்தி” தொலைக்காட்சி “பெஃதா” எனும் பெண் AI செய்தி முன்வைப்பரை அறிமுகம் செய்து வைத்தது. இதன்போது, குவைத்துக்கே உரிய அரபு மொழியில் “பெஃதா” தன்னை அறிமுகம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில், எமது நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் எப்போது AI செய்தி முன்வைப்பர்கள் தோன்றுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இஸ்பஹான் சாப்தீன்,

ஊடக பயிற்றுவிப்பாளர் (Media Trainer)

13.06.2023

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.