துண்டுக்காட்சியும் காட்சி மொழியும் (Shot & Visual Language)
1 min readபேச்சு மொழியை (Verbal Communication) எடுத்துக் கொண்டால் அதற்கென பல இலக்கண முறைகள் உண்டு. சொல்ல வரும் செய்தியை தெளிவாக சொல்ல அது இன்றியமையாதது. அங்கே, எழுத்து (Letter), சொல் (Word), வாக்கியம் (Sentence), பந்தி (Paragraph) என இலக்கணம் வளர்ந்து அர்த்தம் கொடுக்கும். அதேபோல் தான் காட்சி மொழி (Visual Language) யும் காணப்படுகிறது. இங்கே, காட்சி மொழி (Non Verbal Communication) பேச்சற்ற மொழியாக காணப்படுகிறது. இங்கும் சொல்ல வரும் செய்தியை அர்த்தபூர்வமாக சொல்ல காட்சி இலக்கணம் (Visual Grammar) காணப்படுகிறது. இந்த காட்சி இலக்கணத்தை மிகச் சரியாக அறிந்து பயன்படுத்தினாலேயே காட்சி (Visual Language) மொழி சிறப்பாக புலப்படும். அந்த வகையில், துண்டுக்காட்சி (Shot) மற்றும் காட்சி மொழி வளர்ச்சியுறும் முறை (Development of Visual Language) பற்றி இந்த தலைப்பில் பார்ப்போம்.
துண்டுக்காட்சிகள் (Shots) சிலதை தொடராக இணைக்கும் போது காட்சித்தொடர் அல்லது கூட்டுக்காட்சி (Sequence) உருவாகிறது. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் (Time & Space) நிகழுவதைச் சுட்டும் சில காட்சித்தொடர்களை இணைக்கும் போது ஒரு (Scene) படக்காட்சி உருவாகிறது. இப்படி பல படக்காட்சி (Scene) கள் இணைந்தே ஒரு அர்த்தமுள்ள காணொளி உருவாகிறது. ஒரு அர்த்தமுள்ள காணொளி என்னும் போது அது ஒரு சினிமா படமாகவோ, ஒரு பாடல் காட்சியாகவோ, குறும்படமாகவோ அல்லது விவரணப்படமாகவோ இருக்க முடியும்.
துண்டுக்காட்சி (Shot) :
கேமராவில் ஒரு காட்சியை பதிவுசெய்ய பதிவு பொத்தானை (Record) அழுத்தி பின் நிறுத்தல் பொத்தானை (Pause / Stop) அழுத்தும் வரையான நேரத்துக்குள் பதிவாவும் காட்சியே ஒரு துண்டுக்காட்சி (Shot) என அழைக்கப்படும். ஒரு துண்டுக்காட்சியின் நேரம் ஒரு செக்கனில் இருந்து பல செக்கன்கள் வரை காணப்படலாம்.
அதாவது, கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்ததில் இருந்து பதிவு செய்து முடியும் வரையான நேரத்திற்குள் பதிவில் இயங்குகின்ற விடயங்களின் உள்ளடக்கம் துண்டுக்காட்சி என்று அழைக்கப்படும். காட்சிமொழியில் மிக மிக அடிப்படையானது இந்த துண்டுக்காட்சியாகும்.
கூட்டுக்காட்சி (Sequence) :
ஒரு பொருள் அல்லது ஒரு செயலினை சுட்டும் சில துண்டுக்காட்சிகளை ஒழுங்கு முறையில் அடுக்கும் போது அதனை ஒரு கூட்டுக்காட்சி (Sequence) என்று அழைக்கப்படும். ஒரு கூட்டுக்காட்சியில் இரண்டு அல்லது மூன்று தொடக்கம் உதாரணத்திற்கு பத்து வரையான துண்டுக்காட்சிகள் இணைக்கப்பட முடியும். இதனை, காணொளி செம்மையாக்குனர் (Video Editor) மேற்கொள்வார்.
படக்காட்சி (Scene) :
சில கூட்டுக்காட்சிகள் சேரும் போது படக்காட்சி (Scene) உருவாகிறது. ஆனால், ஒரு படக்காட்சி (Scene) எனும் போது அந்த கூட்டுக்காட்சிகள் ஒரே இடத்தில் (Space), ஒரே நேரத்தில் (Time) நிகழும் அல்லது இருக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். அதனையே நாம் ஒரு படக்காட்சி (Scene) என்று அழைப்போம்.
இறுதிக் காணொளி (Video Product) :
பல படக்காட்சி (scenes) களின் தொகுப்பே ஒரு அர்த்தமுள்ள காணொளியை உருவாக்குகிறது. அர்த்தமுள்ள ஒரு காணொளி எனும் போது அது குறும்படம், முழுநீளப்படம், விவரணப்படம் அல்லது ஒரு பாடல் காட்சியாகக்கூட இருக்க முடியும்.
படக்காட்சிக்குள் உள்ளடங்குகின்ற துண்டுக்காட்சிகளின் நேர அளவுக்கு ஏற்பவே முழு படக்காட்சியின் நேரம் தீர்மானிக்கப்படும். படக்காட்சிகள் பல ஒன்றிணைந்து ஒரு கதை உருவாவதோடு குறித்த படக்காட்சிகளுக்குள் இயங்கும் கதாபாத்திரங்களிடையே நிகழும் ஊடாட்டம் மற்றும் மோதல்கள் என்பன கதையின் இறுதியில் வெளிவருகின்ற செய்தியாக மாறுகிறது. எனவே, ஒரு அர்த்தமுள்ள ஒரு காணொளிக்கு மிக அடிப்படையானது துண்டுக்காட்சி (Shot) ஆகும்.
எனவே, துண்டுக்காட்சி (Shot) தொடர்பான மேலதிக விடயங்களை அடுத்த தலைப்பில் பார்ப்போம்.
இஸ்பஹான் சாப்தீன் – 2019.08.01