December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

இணைய வெளியில் போதைப் பொருள் (Online Drug Trafficking)

1 min read

இணையத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் சார்ந்த கொடுக்கல்-வாங்கல்கள் பற்றிய தெளிவைப் பெற்றிருப்பது, போதைப்பொருள் சார்ந்த சதி வலைகளில் சிக்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இணைய வெளியில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான நடவடிக்கைகளை Online Drug Trafficking என்று குறிப்பிட முடியும்.

இன்று போதைப்பொருள் பாவனை உலகம் பூராகவும் பரவுவதற்கு, இணைய வசதியை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என்போர் பயன்படுத்துவதும் ஒரு காரணமாகும். போதைப் பாவனையை அதிகரிக்கவும், விளம்பரப்படுத்தவும், கடத்தவும், கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளவும் இணைய வசதியும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது என சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகள் Dark Web மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னர் மின்னஞ்சல் வசதியும் அனுமதி மறுக்கப்பட்ட Chat Room வசதியும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களும் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த அடிப்படையில், சட்டவிரோதமான போதை மாத்திரை விளம்பரங்கள், ஊக்க மருந்துகள் என்ற பெயரில் வரும் விளம்பரங்கள் இன்று அதிகம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதையும் மின்னஞ்சல்களுக்கு வருவதையும் நாம் காணலாம்.

இணையத்தை கையாள்வதில் உள்ள இலகு தன்மை, தொடர்பாடலுக்கான வசதிகள், அனாமதேய விளம்பரப்படுத்தல் களுக்கான வசதிகள், வேகமான தொடர்பாடல், பொதிகள் பயணிப்பதை கண்காணிக்கும் வசதி மற்றும் சர்வதேச எல்லைகள் கடந்த தொடர்பு என்பவை இன்று இவர்களது நடவடிக்கைகளை சுதந்திரமாக்கியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மிகக் குறுகிய காலத்தில் பெருந்தொகைப் பணத்தை சம்பாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தாது என்பதே இந்த Physical அல்லாத Virtual முறையை இவர்கள் பயன்படுத்துவதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது. பாரிய அளவில் வியாபாரம் செய்வோர் சர்வதேச வங்கிகளுடனான கொடுக்கல்-வாங்கல் முறைகளையும் (Virtual Transaction) ஒன்லைன் மார்க்கெட்டிங் முறைகளையும் கையாளுகின்றனர். சிறிய அளவிலான வியாபாரிகள் மொபைல் Easycash முறையைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, வெளிநாடுகளில் போதைப் பொருள் கடத்தலுக்காக ஆன்லைன் கூரியர் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். அதேபோல், குறித்த இடத்திற்கு அனுப்பிய பொருள் செல்கிறதா என்பதையும் தடைகள் இருக்கின்றனவா என்பதையும், எதிர்ப்படும் சேவை நிலையத்தில் ஏதாவது தடைகள் இருப்பின் பொதிகள் நகராது தாமதப்படுத்துவதையும் online கண்காணிப்பு மூலம் இந்த குற்றவாளிகள் மேற்கொள்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த இணைய கண்காணிப்பு மற்றும் சட்ட ஒழுங்குகளை பலப்படுத்துவது பற்றி தற்போது பல நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

நேருக்கு நேர் தொடர்பாடலை விட இந்த Online மூலமான தொடர்பாடல் பல குற்றவாளிகளுக்கு தமது அடையாளத்தை மறைத்து இயங்குவதற்கு வழிகோலியுள்ளது. போதைப் பொருள் பரவலுக்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இளைஞர் யுவதிகளை கவர்வதற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்தவகையில், இதற்காக சமூக வலைதளங்களையும், பிரத்தியேக இணையதளங்களையும், Chat Room களையும் பயன்படுத்துவதை அவதானிக்கலாம். சமூக வலைதளங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை இலங்கையில் இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

அந்தவகையில், அண்மையில், Facebook Party என்ற பெயரில் இளைஞர் யுவதிகளை ஒன்றுகூட்டி போதைப்பொருள்கள் பகிரப்பட்டதும் பலர் உயிர் இழந்ததும் நாம் அறிந்ததே. எனவே, சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை, யுவதிகளை குறிவைத்து இப்படியான கவர்ந்திழுக்கும் யுக்திகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை உறுதியாக கூற முடியும். பேருவளை மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்க இருந்த இப்படியான Facebook Party களை போலீசார் தலையிட்டு நிறுத்தியதையும் நாம் அறிவோம். எனவே, ஒன்லைனில் உலவும் நாம், சமூக ஊடகங்களில் இயங்கும் நாம் இதுகுறித்த அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.

போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் தொடர்பான விளம்பரங்களையும் chat room களில் pop-up ஆக வரும் விளம்பரங்களையும் கிளிக் செய்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும். Spam களில் இப்படியான விளம்பரங்கள் வந்தால் அவற்றை திறக்காமல் இருப்பது அவை மீண்டும் மீண்டும் ஈமெயிலிற்கு வருவதை தடுக்க முடியும்.

மருந்துகளையோ, ஊக்க மருந்துகளையோ Online இல் வாங்குவதும், இவற்றை விளம்பரம் செய்யும் இணையத் தளங்களை அடிக்கடி சென்று பார்ப்பதும் அவசியமற்ற பிரச்சினைகளை கொண்டு வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல், ஒன்லைன் மூலம் இப்படியான போதைப் பொருட்கள் சார்ந்த, போதைப்பொருள் கடத்தல் சார்ந்த விடயங்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் போலீஸ் சைபர் யுனிட்டிற்கோ அல்லது 1984 என்ற இலக்கத்திற்கோ அழைத்து தெரிவிக்க முடியும். தகவல் தருபவர்களின் விபரங்களை இரகசியமாக பேணப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு உறுதி அளித்துள்ளது.

இஸ்பஹான் சாப்தீன்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்.
2019.01.24

(இணையத்தில் போதைப் பொருள் விற்பனையாளர்கள் பயன்படுத்துகின்ற Code Words மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் Dark Web இல் இயங்கும் இணைய சந்தைகள் பற்றிய விபரங்கள் போன்றவற்றை நலன் கருதி இங்கு தவிர்த்துள்ளேன்)
#Online #Drug #Trafficking #IsbahanLk #CyberCrime #SLBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.