December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

இணைய வெளியில் புலமைச் சொத்துரிமை மீறல் (Internet and Violation of IP)

1 min read

நாம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றோம். இன்று சகலதும் கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றது. இணைய வெளியில் தகவல்களின் பிரவாகமும் மிக வேகமாகவே காணப்படுகின்றது.

இணையத்தில் பதிவேற்றப்படுகின்ற தகவல்களும் தரவுகளும் எல்லோருக்கும் எந்த வகையிலும் பயன்படுத்த முடியும் என்ற நிலை காணப்படுகிறது. ஒரு விடயம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டால் அது பொதுச் சொத்தாக மாறிவிடுகிறது என்ற பார்வையே பெரும்பாலானவர்களிடம் காணப்படுகின்றது. எனவே, எந்த ஒரு நபருடைய ஆக்கத்தையும் பதிவையும் வேண்டியவாறு பயன்படுத்தலாம், அது இலக்கியத் திருட்டாக அமையாது என்றே பலரும் நினைக்கின்றனர்.

சமூகவலைதளங்களில் ஒருவர் பகிர்கின்ற கவிதையை, கட்டுரையை அல்லது புகைப்படத்தை மற்றொருவர் அவரது பெயரில் பகிர்கின்ற நிலை மிக சர்வ சாதாரணமாகவே நிகழ்வதைக் காணலாம்.

அதேபோல, ஒருவர் கடும் கஷ்டப்பட்டு புத்தகம் அச்சிட்டிருப்பார். ஆனால், அதன் பிரதிகள் விற்பனையாகி முடிய முன்னரே எந்தவித அனுமதியும் இன்றி இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

பிறருடைய புத்தகங்களை, சஞ்சிகைகளை மற்றும் பத்திரிகைகளை இணையத்தில் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வாசிக்க காசு அறவிடுகின்ற நிலையும் காணப்படுகின்றது.

அது தவிர பிறருடைய ஆய்வுக் கட்டுரைகளையும், ஆய்வு நூல்களையும் பதிவிறக்கம் செய்து தமது பட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இணையத்தில் காணப்படும் பிற மொழி ஆக்கங்களையும், ஆய்வுகளையும் மொழிமாற்றம் செய்து தமது படைப்புகள் போல் பயன்படுத்துகின்றனர். குறைந்தது மூலமொழி ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதனையும் மறைத்து விடுகின்றனர்.

அதேபோல் Open Source அல்லாத வீடியோ, ஓடியோ மற்றும் இசை போன்ற பிறருக்கு உரிமையானவற்றை தமது படைப்புகளில் அனுமதி இன்றி பயன்படுத்துவதும் உண்டு.

ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சொந்தமான இப்படியான அறிவுசார் ஆக்கங்களையும் இலக்கிய மற்றும் கலைப் படைப்புகளையும் நாம் ‘புலமை சொத்து (Intellectual Property)’ என்று அழைப்போம்.

சமூக ஊடகங்களில் இப்படியான புலமைச் சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. குறிப்பாக, instagram ஐ அவதானித்தால், ஒருவர் பகிரும் புகைப்படங்களை பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் சிறந்த வழிமுறையை கொண்டுள்ளது. ஒருவர் பகிர்கின்ற புகைப்படங்களை வேறு யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் அதன் Settings வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், YouTube வேறுவிதமான வழிமுறையைக் கொண்டுள்ளது. நீங்கள் Open Source அல்லாத copyrights பெறப்பட்ட இசை, குரல் பதிவுகள் மற்றும் காணொளிகளை உங்களது படைப்புகளில் பயன்படுத்தி நீங்கள் அவற்றை யூடியூபில் பதிவேற்றினால் youtube அவற்றை அடையாளம் கண்டுவிடும். அப்படி அடையாளம் கண்டதும் உங்களது யூடியூப் சேனலை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உடன் முடக்கிவிடும். அல்லது குறித்த post ஐ Hide செய்துவிடும். இது, குறித்த படைப்புக்குரியவரின் உடன்படிக்கை படி youtube நிறுவனத்தால் உடன் மேற்கொள்ளப்படுவதாகும். அதேபோல், சில சமயங்களில் intellectual property rights சம்பந்தமான ஒரு வீடியோவை அனுப்பி வைக்கும். அத்தோடு சில கேள்விகளையும் வழங்கும். அவற்றுக்கு சரியான பதில்களை அழித்தால் அந்த குறித்த வீடியோவை நீக்கிவிட்டு தமது கணக்கை மீள வழங்கிவிடும்.

இவை, இணைய வெளியில் புலமைச் சொத்துக்கள் விடயத்தில் கைக்கொள்ளப்படுகின்ற சில வழிமுறைகளாகும்.

அதேபோல், இது பற்றிய சட்டரீதியான வழிமுறையையும் அறிந்திருப்பது அவசியமாகும். இப்படியாக புலமைச் சொத்துக்கள் திருடப்படுவதை தடுக்கவும், முறையற்ற விதத்தில் பாவிப்பதை தடுக்கவும் எமக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 2003 ஆம் ஆண்டு 36 வது இலக்க சட்டமூல மறுசீரமைப்பு மூலம் இதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, புலமை சொத்துரிமை மீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். இந்த சட்டமூலத்தில் ‘கணினி’ மற்றும் ‘கணினி நிகழ்ச்சிகள்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதன் மூலம் கணினி மற்றும் இணையம் சார்ந்த சகல விதமான புலமைச் சொத்துரிமை மீறல்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, இணையவெளியில் இப்படியான உரிமைச் சொத்து மீறல்களில் ஈடுபடுவோரைத் தடுக்கவும், நம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும் இவற்றை கருத்திற் கொள்வது அவசியமாகும்.

இஸ்பஹான் சாப்தீன்,
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

30.01.2019
#Online #CyberCrime #Intellectual #Property #Violation #IsbahanLk #SLBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.