வானொலியும் நானும்.
இன்று பெப்ரவரி 13, சர்வதேச வானொலி தினம். வானொலி என்பது, நம் வளர்ச்சியோடு பயணித்த ஒன்று. வாழ்வின் சில நினைவுகளை அவ்வப்போது சில வானொலி நிகழ்ச்சிகள் ஞாபகப்படுத்துவது கொண்டு இதனை புரிந்து கொள்ளலாம்.
நோன்பு காலங்கள், பெருநாள் நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஊடுறுவல்கள், கீதங்கள், பாடல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் என பல்சுவை விடயங்களை ஆசையோடு கேட்ட ஒரு காலம் இருந்தது. பக்கத்து வீட்டிலோ, கடையிலோ ஓங்கி ஒலிக்கும் இவற்றை நம் வீட்டுக்கு கொண்டு வர அன்று வசதி இருக்கவில்லை. வானொலி ஒன்றை வாங்கி நம் வீட்டிலும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற அவா எப்போதும் இருந்திருக்கிறது.
புலமைப் பரிசில் பரீட்சை சித்தியடைந்த போது பல்வேறு பரிசில்களை ஆசிரியைகள் எனக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். அதில், ரழீனா மிஸ் எனக்கு வழங்கிய பரிசு வானொலிப் பெட்டி. அந்த வானொலிப் பெட்டி ஒரு கனவை என்னுள் விதைக்கும் என்று அன்று நான் நினைக்கவில்லை. அந்த வானொலிப் பெட்டியை மிக நீண்ட காலமாக பத்திரப்படுத்தி பயன்படுத்தி வந்தேன். அதில் ஏற்பட்ட சில கோளாறுகளை நானே கழற்றி சரி செய்வேன். ஒருநாள் அந்த வானொலி பாடாமலே போய்விட்டது. அதன்பிறகும் ஞாபகத்திற்காக பல காலம் வைத்திருந்தேன். அப்போதுகளில், உம்மா, அடிக்கடி, அதை கழற்றிப்பூட்டியதால் தான் பழதானது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அந்த நாட்களின் நினைவுகள் இந்த வானொலிப்பெட்டிக் கதையோடு ஞாபகம் வருகிறது.
ஊரிலே சிங்களப் பெருநாள், வெசாக் போன்ற பண்டிகைகளை முன்னிட்டு சில சிங்கள சகோதரர்கள் இணைந்து ஒரு பிரதேச வர்த்தக அலைவரிசையை செய்து வந்தார்கள். அதில் சில முஸ்லிம் சகோதரர்களும் இருந்தார்கள். அந்த சேவையில் தமிழ் அறிவிப்பாளராக போக ஆசை ஏற்படவே, அதனுடன் இணைந்து கொண்டேன்.
பின்னர், நோன்பு காலங்களில், ஏன் நாம் இப்படி ஒரு வானொலி அலைவரிசையை நடத்தக்கூடாது என சிந்தித்தேன். பல நண்பர்களுக்கும் சொன்னேன். இறுதியில், இரு நண்பர்களும் நானும் ஊரிலிருந்தே ஒரு பிரதேச வானொலி அலைவரிசையை தொடங்கினோம். ஒரே ஒரு தயாரிப்பாளர், அறிவிப்பாளர் என்ற நிலையில் அந்த வானொலி சேவை ஆரம்பமானது. குறித்த நண்பர்கள் இருவரும் சிங்கள மொழியில் கற்றவர்கள். எனவே, நிகழ்ச்சிகளுக்காக அப்போது கடும் கஷ்டப்பட்டேன். பல நாட்களின் பின்னர், நண்பர்கள் பலரும் இணைந்து கொண்டார்கள். அதற்கடுத்த வருடம் அதிக விரிவுபெற்றது. அதன் பின் வந்த வருடங்களில் ஊருக்கு வெளியே கற்றலுக்காக செல்ல வேண்டி வரவே, அதிலிருந்து படிப்படியாக தூரமாகி விலகிவிட்டேன்.
அதன்பிறகு, திஹாரிய, பேருவளை, கெலிஓயா எனப் பல இடங்களிலும் பல்வேறு நிகழ்வுகளை முன்வைத்து மூன்று நாள் வானொலி சேவைகளை நடத்திய போது அவற்றோடு இணைந்து கொண்டேன். அப்போதுகளில், வானொலி குறித்து நிறையவே வாசித்தேன்.
ஆனால், பிறகு, காலம் கொண்டு வரும் சில முடிவுகளோடு வாழ்க்கையும் நகர ஆரம்பித்தது. வானொலியோடு தொடர்புபடுவது என்பதை விட வானொலி கேட்பதே பெரிய விடயமாக மாறிப்போனது.
பட்டப் படிப்புடன் கிடைத்த முதல் தொழிலும் இந்த பக்கத்தில் இருந்தே என்னை மிகவும் தூரமாக்கிவிட்டது. திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு மீண்டும் ஊடகத்துறையை நோக்கி தள்ளிவிட்டது. காட்சி மற்றும் எழுத்து ஊடகம் சார்ந்ததாக சுமார் மூன்று வருடங்கள் தொடர்ந்தது அப்பயணம்.
கடந்த வருடம், மற்றுமொரு திடீர் வாய்ப்பாக வானொலியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எனது ஆசான்கள் இருவர் இதற்கான பின்னணியாக இருந்தார்கள். நான் என்னை சுதாகரிப்பதற்குள் சமூக நலன் என்ற ஒற்றை நோக்கம் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது.
எல்லாம் எழுதப்பட்டது. அது எப்போது எப்படி நிகழும் என்பதை நிகழ்ந்த பிறகு மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
இன்று, இலங்கையின் அன்னை வானொலியோடு இருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். 90 வருட இலங்கை வானொலி ஒலிபரப்பு வரலாற்றின் ஒரு புள்ளியில் நானும் இணைந்திருப்பதே அதற்குக் காரணம்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக தொடரும் இந்தப்பயணம் வினைத்திறனும் விளைபயன் மிக்கதுமாக அமைய இறைவா நல்லருள் செய்வாயாக!