December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

இணைய குற்றங்கள் (Cyber Crime)

1 min read

இணையத்தினால் பெற முடியுமான அனுகூலங்கள், பயன்கள் மற்றும் நன்மைகள் இவைதான், இவ்வளவு தான் என யாராலும் வரையறுத்துக் கூற முடியாது. அந்த அளவுக்கு இந்த இணையவெளி மிகவும் பரந்துபட்ட ஒரு களமாக காணப்படுகிறது. அதேநேரம், இதில் பிரதிகூலங்களும், தீமைகளும் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு நம் கையில் உள்ள அல்லது நமது கட்டுப்பாட்டில் உள்ள திறன் பேசி மூலமாக இணையத்தில் இணைகிறோம். இணையவெளியில் எமது பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். எனவே, நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்கிறோம். உண்மையில் நாம் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு எமது கையடக்க திறன் பேசி மூலம் இணையத்தில் உலவுவதால் நமக்கு இந்த எண்ணம் வருவது நியாயம் தான். ஆனால், உண்மை அதுவல்ல. நாம் எந்தளவுக்கு அவதானமாக இருக்கிறோமோ அந்தளவுக்கு பாதுகாப்பாக இயங்க முடியும். எந்த பாதிப்புகளும் இல்லாமல் உச்ச கட்ட பயன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

நிஜ உலகில் (Real World) நாம் திருடர்களின், எதிரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகி இருப்போம். அதைவிட பாரதூரமான செயல்களை செய்யும் திருடர்களும், எதிரிகளும் மெய்நிகர் (Virtual World) உலகில் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

உங்களது ஒரு பொருளை சாதாரணமாக ஒருவர் திருடினால் அது உங்களுக்கு ஒரு சில மணி நேரங்களுக்குள் குறித்த பொருள் திருடப்பட்டுள்ளது என்பது தெரிந்து விடும். ஆனால், இணைய திருடன் (Cyber theft) ஏதாவது ஒன்றை திருடினால் உங்களுக்கு மிகப் பெரும் இழப்பு, ஆபத்து ஏற்படும் வரை உங்களால் உணரக்கூட முடியாது போகும்.

அதேபோல், உங்களிடம் இருந்து திருட்டுப்போன பொருள் உங்களுக்கு மீளக் கிடைத்தால் அது உங்களிடம் மாத்திரம் தான் உள்ளது என உறுதியாக சொல்ல முடியும். ஆனால், இணைய வெளியில் திருடப்பட்ட ஒன்று கணப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பார்வைக்கு சென்று விடும். எனவே, இணைய வெளியில் திருடப்பட்ட ஒன்று முழுமையாக மீள உங்களுக்கு கிடைத்து விடும் என உறுதியாக சொல்ல முடியாது.

இது ஒரு உதாரணம் மாத்திரமே. இது போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு விடயங்களும், நடவடிக்கைகளும் இணைய வெளியில் காணப்படுகின்றன.

இணைய வெளியில் தனிமனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது தொடக்கம் முழு மனித குலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவது வரையிலான விடயங்களும் நடவடிக்கைகளும் காணப்படுகின்றன. அந்த பாதிப்புகள் பல தரப்பட்டவை. இவற்றையே நாம் இணைய குற்றங்கள் (Cyber Crimes) எனக் குறிப்பிடுகிறோம்.

இதனை, கணனி குற்றங்கள் (Computer Crimes), ஈ குற்றங்கள் (E-Crimes), உயர் தொழில் நுட்ப குற்றங்கள் (Hi tech crimes), இலத்திரணியல் குற்றங்கள் (Electronic Crimes), வலைப்பிண்ணல் குற்றங்கள் (Network Crimes), கணனி சார் குற்றங்கள் (Computer related Crimes), இணைய குற்றங்கள் (Internet Crimes), தொடரறா குற்றங்கள் (Online Crimes), தகவல் யுக குற்றங்கள் (Information Age Crimes), எண்ம குற்றங்கள் (Digital Crimes) என பலவாறு அழைக்கப்படுகிறது. அதாவது, குற்றங்கள், எண்ம சாட்சியை (Digital Evidence) ஐ அடிப்படையாக கொண்டிருந்தால் மேற்குறிப்பிட்ட எவ்வகையிலும் அழைக்கப்படலாம்.

எனவே, மேற்சொன்னவற்றை தொகுத்து நோக்கினால் (Cyber Crime) என்றால் என்ன என்பது தெளிவாகும்.

இணைய குற்றம் என்பது இணைய வெளியான மெய்நிகர் உலகில் மேற்கொள்ளப்படும் சகல சட்ட விரோத நடவடிக்கைகளையும் குறிக்கிறது.

அதாவது, கணனி அல்லது இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியுமான கருவிகள் (Devices) மற்றும் இணையம் சார்ந்த சகல குற்றச் செயல்களையும் இணைய குற்றங்கள் எனக் குறிப்பிடலாம். Cyber Crime என்பது பரந்துபட்ட ஒரு விடயமாகும். பல்வேறு சட்டத்திற்கு முரணான மற்றும் மனித நலனையும் அவனது உடமைகளையும் பாதிக்கின்ற சகலவிதமானவையும் இதில் உள்ளடங்குகின்றன.

www.isbahan.com
2018.09.14 மீள்பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.