13 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு
சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வை எனக்குள் பேரவாவாக மாற்றிய நாள் இன்று. என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு எனக்குள் மிகப்பெரிய அதிர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு என்றால் இரு கருத்துக் கிடையாது. அன்று தொடக்கம் இன்று வரை சமூகத்திற்கு தேவையான என்னால் முடியுமான சேவையை செய்யும் பாக்கியத்தை இறைவன் தந்திருக்கிறான். இனியும் தருவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் பேருவளை ஜாமியா நளீமியாவில் முதலாம் தரத்தில் கற்றுக்கொண்டிருக்கும் போது தான் இவ்வழிவு ஏற்பட்டது. அப்போது எனக்கு அம்மை நோய் பீடித்திருந்தது. எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை. கைநீட்ட சேட்டால் உடம்பை மறைத்துக் கொண்டு நண்பர்களுடன் மறுநாள் காலையிலேயே காலிக்கு சென்றேன். அதே வேகத்தில் வீட்டில் இருந்தபடியே முடிந்த வேலைகளைச் செய்தேன். நான்கைந்து தினங்களில் முழுமையாக சுகமாகாத நிலையில் அனர்த்த இழப்புக்களை பதியும் வேலைக்குச் சென்றேன். எல்லோரும் என் உடம்பை பார்த்து விட்டு வீடு செல்லுமாறு ஏசினார்கள். அந்த நேரத்தில் எனக்கு அந்த முகாமில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் முன்னிலையில் எனது நோய் பெரிதாகத் தெரியவில்லை. அன்று தொடக்கம் தகவல் திரட்டுதல், இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்டல், வீடுகளை துப்புரவு செய்தல், ஆறுதல் ஆலோசனைகளை வழங்குதல், நிவாரணங்களை பகிர்ந்தளித்தல், மருத்துவ முகாம்களுக்கு உதவுதல், தற்காலிக இருப்பிடங்களை அமைத்தல் என பல மாதங்கள் கழிந்தன. அதற்கு முன்னர் அகுரஸ்ஸ போர்வையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது உடன் களத்துக்குச் சென்ற அனுபவம் இருந்தாலும் சுனாமி கற்றுத் தந்த பாடம் வாழ்வில் மறக்கமுடியாதது.
சுனாமிக்குப் பின்னர் தான் மக்களின் கண்ணீர், கவலை, சந்தோஷம் எல்லாம் என்னுள் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்திற்காக செயற்படும் எண்ணத்தை வேட்கையாக மாற்றியது எனலாம். இறைவன் மட்டுமே புகழுக்குரியவன். அதன்பின்னர் பல்வேறு சமூக செயற்பாடுகளிலும் அனர்த்த சந்தர்ப்பங்களிலும் உடன் முன்செல்லும் மனத்தை தந்துள்ளான். போர்வை வெள்ளம், வெல்லம்பிடிய வெள்ளம், அழுத்கமை கலவரம், மல்வானை வெள்ளம், மண்சரிவு, கிந்தோட்டை கலவரம் என கடந்த 13 வருடங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, பேதமின்றி பல்வேறு வகையில் என் உதவியை, பங்களிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் உடன் வழங்க இறைவன் அருள் புரிந்திருக்கிறான். இனியும் அருள் புரிவான்.
சுனாமி ஞாபகப்படுத்த விரும்பாத வலியை பதிந்து சென்றிருக்கிறது. சுனாமி போன்ற பேரனர்த்தங்களில் இருந்து இறைவா எல்லோரையும் பாதுகாப்பானாக! எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே!