175வது சர்வதேச ஒளிப்பட தினம் (ஆகஸ்ட்-19)
1 min read
‘காட்சிப்படுத்துதல்’ முறை தகவல் பரிமாற்ற மொழியாகவும், பின் நிகழ்வுகளின் பதிவகமாகவும், பின் ரசனையின் வெளிப்பாட்டு ஆக்கங்களாகவும் வளர்ச்சி கண்டன. அவற்றின் ஊடகங்களாக சிற்பம், ஓவியம் என்பன திகழ்ந்தன. மனிதகுலம் தோன்றிய காலம்தொடக்கம் ‘காட்சிப்படுத்துதல்’ காணப்பட்டுள்ளது.
அதன்பின் இலத்திரனியல் புரட்சியுடன் மனிதன் இவற்றை புகைப்படம் மூலமாக நிவர்த்தி செய்ய முனைந்தான். 13 ஆவது நூற்றாண்டிலேயே இதற்கான முனைப்புகள் நிகழ்ந்தன. கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சிகண்டன.
அதன் மூலம் தோன்றியதே புகைப்படக்கலை (Photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ‘ஒளியினைப் பதிதல்’ ‘ஒளியின் எழுத்து’ என பொருட்படும். இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தவர் 1839-ம் ஆண்டு கண்ணாடியைப் பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையைக் கண்டுபிடித்த சர் ஜான் ஹெர்செல்.
முதலில் நிரந்தரமாகப்பதியும் கருப்பு-வெள்ளை ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ்ஸால் பிடிக்கப்பட்டது. வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது.
எண்மப் புரட்சியுடன் நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி (Digital Camera) 1969 களில் உருவாக்கப்பட்டது. (எண்ம ஒளிப்படக் கருவி யின் பின் ‘புகைப்படம்’ என்ற சொல்லை பயன்படுத்துவதை விட ஒளிப்படம் என்ற சொல் பொருத்தமானதெனக் கருதுகிறேன்.)
மொழியாக…..
ஒரு ஒளிப்படம் ஆயிரம் கதைகளை சொல்லும் திறன்மிக்கது. மனித மொழிகளுள் இலகுவாய் தகவல் சொல்லும் திறமை இதற்குண்டு. ரசனை, தேவை, விருப்பு என பலதுக்கும் ஒளிப்படவியல் (Photography) துறை விரிவுகண்டுள்ளது. ஒளிப்படக் கண்காட்சிகள் மூலம் இன்று பல்வேறு கருத்துக்களும், சிந்தனைகளும், தகவல்களும் பெரியளவில் நகர்த்தப்படுவதை காணலாம்.
பதிவாக…..
நினைவு தெரியா பருவத்தை, குழந்தையான என்னை காட்டி நிற்கிறது. ஒளிப்படம், நகர்ந்த காலங்களின், வயதின், நிகழ்வுகளின் நினைவகம். ஆவணம்.
கலையாக…..
ஓடிக்கொண்டிருக்கும் உலகை நிறுத்திக் காட்டும் கலை இது. இதனாலேயே ஒளிப்படங்கள் ரசிக்கப்படுகின்றன. குழந்தையின் புன்னகையை, துள்ளியோடும் மானை, தாவிச் செல்லும் அலையை, பாயும் நிர்வீழ்ச்சியை நிறுத்திக்காட்டும் திறன் ஒளிப்படத்துக்கு மட்டுமே முடியும். இந்த ரசனை உணர்வு ஒவ்வொரு மனிதனையும் கலைஞனாக மாற்றியிருப்பதைக் காணலாம். அதனால்தான், கையடக்க தொலைபேசி கமரா இன்றி இல்லை என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது
.
-இஸ்பஹான் சாப்தீன்-