தங்கமீன்கள் | நீர் வற்றினாலும் நீந்தும்…
1 min readபித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
“புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்” என்றான்.
-கவிக்கோ அப்துல் ரகுமான்-
ஓவெனச் சப்தமிட்டபடி செல்லம்மா, புத்தக மூட்டையில் இருந்து ஒவ்வொரு புத்தகமாய் வீசியெறியும் போது குழந்தைகளின் விடுதலை வேட்கை நன்றாகவே புரிந்தது. குழந்தைகளை கிழிக்கும் புத்தகங்களிடம் இருந்து தப்பிக்க முயலும் பிரயத்தனமே அது. செல்லம்மாவைப் போலவே டீச்சரின் வருகையோடு தோற்றுப் போய்விடுகிறது இப்படியான பல குழந்தைகளின் முயற்சி. ‘குழந்தைகளே சமர்த்தாயிருங்கள் புத்தகங்களை கிழித்துவிடாதீர்கள்’ என்கிற தொணியே இன்னும் நம் பள்ளிகளில் உயர்ந்தொலிக்கிறது.
“குழந்தைகளுக்கு படித்துக் கொடுக்க முன் குழந்தைகளை படியுங்கள்” – மாரியா மொண்டிசூரி. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எங்கோ ஒரு இடத்தில் வாசித்தது. இந்த வாசகத்தை மீண்டும் ஞாபகமூட்டியது தங்கமீன்கள். ரசிக்க வைக்கும் திரைமொழிக்கு அப்பால் யதார்த்த படிமங்களை சுமந்து வந்த ஒரு படைப்பாக்கமாக தங்கமீன்களை காண்கிறேன். ராம் சொல்வதைப் போல “காத்திருத்தலே சினிமா”. நல்ல திரைப்படங்களுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. திரையுலகில் வெளியாகும் படங்களில் எப்போதாவது ஒன்றே “தங்க மீன்கள்” போல் வருகிறது. தமிழ் திரைத்தளத்தில் வெளியான தோனி, சாட்டை வரிசையில் இப்போது தங்கமீன்கள் இணைந்து கொள்கிறது.
வெளியேறும் அதிகாலையிலும் வீடடையும் அந்திமாலையும் குழந்தைகளின் முகத்தைப் காண்கின்றபோது நம்மைச் சுற்றியுள்ளவை ‘பள்ளிக்கூடங்களா.. பலிபீடங்களா..?’ என்ற கேள்வியே நமக்குள் மேலெழுகிறது. பலபோது “குழந்தைமை” கொல்லப்படும் இடங்களாக இவை இருப்பதால் ‘பலிபீடங்கள்’ என்ற விடைக்கே வரமுடிகிறது. புத்தகங்கள், School, Home work, Exam, Tuition என்பன குழந்தைகளுக்கு வயதை தாண்டிய சுமைகளை கொடுக்கும் விடயங்களாக மாறியிருக்கின்றன. ஆசிரியர்களும் பெற்றோர்களும் எதிர்பார்க்கும் அடைவு மட்டத்தை குழந்தை அடையவேண்டும் என நினைப்பது எந்தவிதத்தில் நியாயமோ தெரியவில்லை.
குழந்தை நன்றாகக் கற்க வேண்டும் என நினைக்கும் நாம், குழந்தை எவ்வாறு கற்கிறது? எவ்வாறு கற்பிக்க வேண்டும்? என்பதையும் சற்று நினைத்துப்பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் எந்த பிரச்சினையும் இல்லை ஆசிரியர்களிடமே பிரச்சினை இருக்கிறது. குழந்தைகளுக்கு கற்கத் தெரியும், ஆசிரியர்களுக்கு கற்பிக்கத்தான் தெரியவில்லை.
அந்த கற்பித்தல் யுக்தி எது? மாணவர்களை அவர்களின் இயல்புகேற்ப நடத்தி, அவர்களை அடையாளம் காண முனையும் யுக்தியே அது. குழந்தை காணும் உலகத்தில் இருந்து அதற்குக் கற்றுக் கொடுக்கும் யுக்தியே அது. செயல்வழிக் கற்றலிலும், காட்சி வழிக் கற்றலிலுமே குழந்தைகள் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு படத்தின் இறுதிப் பதிவே சான்றாக அமைகிறது. ‘எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து என்னுடனேயே நீந்தி என்னை குளத்தின் அடியில் யாராவது கூட்டிச் சென்றால் நான் தங்கமீன்களோடு நீந்தி விளையாட முடியும். அப்படிக் கூட்டிச் சென்று எங்களோடு விளையாடக் கூடிய ஆசிரியர்களைத்தான் எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்’ எனும் செல்லம்மாவின் விருப்பமே அப்பதிவு.
உறவுகளுள் இழையோடும் பரிவின் தரத்தையும் பிரிவின் ரணத்தையும் மிக அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் செல்கிறது இத்திரையின் மறுபுரம். காதோரம் அழைத்து “நீ மட்டும் செத்துப் போக கூடாதுப்பா” என்று செல்லம்மா சொல்லும் போது எனக்கும் சொல்லாமல் கண் கலங்கிவிட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ அப்பா. அதை நிஜப்படுத்த அப்பாக்கள் படும் பாட்டை பதிவுசெய்யும் கட்சிதம் ராமுக்கு வாய்த்திருக்கிறது. இது வெறும் அப்பா-மகள் கதையாக மட்டும் வராமல் அப்பா-மகன், மாமியார்-மருமகள், அண்ணன்-தங்கை, ஆசிரியை -மாணவி, பெற்றோர்-ஆசிரியர், ஏழை-பணக்காரன் என பல உறவுகளின் உண்மையான பாத்திரங்களை பதிவு செய்திருக்கிறது.
‘காசு இல்லாதது பிரச்சினை இல்லை. காசு நிறைய இருக்குற இடத்துலே நாம மட்டும் காசு இல்லாம இருக்குறதுதான் பெரிய பிரச்சினை” என்று சொல்லும் போதும், “மழைக்கு அந்தபக்கம்தான் இஸ்கூல் பீசெல்லாம் இருக்கா?” என செல்லம்மா கேட்கும் போதும் இங்லீசு பேசும் பாடசாலைகளில் குழந்தைகளை சேர்த்து விட்டு, வீட்டிலும் வெளியிலும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் படும் வேதனைகளை ஒட்டுமொத்தமாக காட்டிவிடுகிறது. சந்திக்கு சந்தி நின்று பேரம்பேசும் கல்விக் கடைகளுக்கு குட்டும் விழுகிறது.
“‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…” பாடல் மிக அருமை. அங்காங்கே வந்து போகும் பல வசனங்கள் அழுத்தமாகவே சில சாட்டை அடிகளை பதிகின்றன. கதை நகர்வு, காட்சிக் கோர்ப்பு, பாத்திர ஊடாட்டம், ஒளிப்பதிவு எல்லாம் திரைக்கு வலுவாகவே இணைகின்றன.
“தங்கமீனெல்லாம் குட்டி குட்டி மீனப்பா.. அதெல்லாம் எங்கப்பா ஆழத்துல இருக்கும்..?”
-இஸ்பஹான் சாப்தீன்-
2013.11.07 பின் மாலை