ஹஜ்ஜி மழ அருவது பாட்டம்
1 min readகாலி மக்களின் மனவாசம்
முதுமொழி-01
இது துல் ஹஜ் மாதம். இந்த மாதம் வந்தாலே ஞாபகத்தில் வருவது உழ்ஹிய்யா. காரணம், நம் நாட்டின் நிலவரம். இம்முறை எந்தப் பிரச்சனையும் இன்றி உழ்ஹிய்யா குர்பான் கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகமே அது. இதனால், முச்சந்தியில் இருக்கும் டீக்கடையில் இது பற்றியே அதிக பேச்சு, விவாதம், கருத்து, இன்னும்…
இடைக்கிடையே மழை பற்றிய முனகலும் வந்து சேர்வதுண்டு. இம் மாத துவக்கத்தோடு மழையும் இணைந்தமையே அதற்குக் காரணம். ‘ஒரே அடியா மழ பேயோனும் இல்லாட்டி வெயில் அடிக்கோனும். இது என்னன்டா கொஞ்சத்துக் கொருக்கா பேயிரதும் நிக்கிறதுமா ஈந்தா , மனிசனுக்கு கஷ்டமே’ என்பது அந்த முனகல்…, அந்த மழைப் பாட்டு…
உண்மை! திடீர்திடீர் என மழை பொழிவதும் நிற்பதுமாகவே இந்நாட்களின் வானிலை. பல நாள் தாண்டியும் இந்நிலை மாறவில்லை. குளிருண்ட உடம்பை சூடேற்ற ஒரு தேனீர் கப் குடிக்கலாமென்று முச்சந்திப் பெட்டிக் கடைக்குள் நுழைந்தேன். நனைந்த மேனியில் என்னைக் கண்ட தேனீர் நண்பர் (Tea mate) ஒருவர். ‘தொட்டம் தொட்டம் மழ, ஒரேஅடிக்கு பேஞ்சி முடிச்சா…’ என சலித்துக்கொண்டார். ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த வயதானவர் ‘ஹஜ்ஜி மழ அருவது பாட்டம்’ என்டு, முந்தின மனிசரு சும்மவா சென்ன’ என்றார். வாவ்….. ஒற்றை வாக்கியத்தில் ஒர் காலநிலை அறிக்கை.
நாம் சிலபோது மழையை ரசிப்போம். அதே மழையை சிலபோது வெறுப்போம். ஆனால் நம்மில் யாராவது மழை பற்றி சிந்தித்திருப்போமா? மழையோடு உறவாடியிருப்போமா? மழையை புரிந்திருப்போமா?
வருடத்தில் பல முறை மழை பொழிகிறது. நாம் குடையைப் பிடிப்பதோடு மழையை மறந்து விடுகிறோம். ஆனால், நம் முன்னோர் மழைக்காதலர்கள், மழை குறித்து அவர்கள் ஏட்டில் படிக்கவில்லை. ஆனால், மழையை அதிகம் புரிந்து வைத்திருந்தார்கள். அந்த புரிதலின் பின்னரான வெளிப்பாடே “ஹஜ் மழ அறுவது பாட்டம்” என்கிற அறிதல்.
ஹஜ் மாதம் என்பது இஸ்லாமிய கலண்டர் பிரகாரம் இறுதி மாதமாகும். இஸ்லாமிய கலண்டர் பிறை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஹஜ் மாதத்தில் பெரும்பாலும் மழை பொழியும். பொழிந்தால் ஒரே பாட்டமாக, தடவையாக பெய்து முடிப்பது கிடையாது. சிறு சிறு பாட்டங்களாக, முறைகளாகவே பொழியும். இந்த காலநிலை அறிவை இவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தது?
காலமும் மழையுமே இவர்களுக்கு ஆசான். நம் முன்னோரின் இந்த முதுமொழி படிப்பறிவால் பெற்றதல்ல பட்டறிவால் கற்றது.
இந்தப் பத்தியை எழுதும் போது மழையை படைத்த அல்லாஹ் கூறும் ஒரு வார்த்தை எனக்கு ஞாபகம் வந்தது. இறுதியாய் அதனை ஞாபகமூட்டுகிறேன்…
“அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி, பூமி இறந்த பின், அதனை அவன் அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றான். நிச்சயமாக இதில் செவியேற்கும் சமூகத்திற்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.” (அல்குர்ஆன் 16;65)