இயல்பிற்கு எதிரான சிந்தனைகளும்… நம் தனித்துவத்திற்கு எதிரான சவால்களும்…
1 min readயாவும் பிம்பமயமாகி வரும் இச்செயற்கை உலகில் அதிகரித்து வரும் உருக்குலைழைந்த கலாசாரம் மற்றும் ஒழுங்கவிழ்ந்த கலாசாரம் பற்றிச் சற்றுப் பேசவேண்டிய நிர்ப்பந்த சூழலில் நாம் பேனை பிடித்திருக்கின்றோம். நிறுவனமயப்பட்டு, திகதி குறிக்கப்பட்டு, சட்டம்போட்டு அன்பையும் அதன் வெளிப்பாட்டு உதவிகளையும் நடைமுறைப்படுத்த முயலும் மேற்குக் கலாசாரம் எமக்குத் தேவைதானா?
பண்பாட்டுக் கலைக் கலாசார விழுமியங்களில் கொட்டிக் கிடக்கும் இவ்வியல்புணர்வுகள் வரையறுக்கப்பட்டு வழங்குவதென்பது மனிதத் தன்மை வீழ்ச்சி கண்டுவிட்டதென்பதையே சுட்டிக்காட்டுகிறது.
நிகழ்கால மேற்கின் நவநாகரீக சிந்தனைகள் நம் இயல்புகளுக்கு முற்றும் எதிர்க்கருத்துகளாகவும் செயற்பாடுகளாகவும் இருப்பது தெளிவாகப் புரியப்பட்டும், நாம் நுகர்வுக்குப் பழக்கப்பட்ட மாதிரி மனிதர்களாக மாறிவிட்டிருக்கின்றோம். ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தினதும் பொருட்களின்; பண்டங்களின்; சேவைகளின் விளம்பரப் பலகைகளாகவும் பதாகைகளாகவும் பண்டங்களாகவும் நாமே மாறியிருப்பது மறைவற்றதொரு விடயமாகும்.
பல்கூட்டுக் கலாசாரம் மற்றும் குறுக்குக் கலாசார (Cross Culture) உலகமாக மாறிவிட்டிருப்பது கலை, இலக்கியங்களில் மாத்திரம் வெளிக்கொணரப்பட்ட ஒன்றல்ல. Remix (மீள்கலவை), Rap (இடையீடு), Graphity (ஒழுங்கவில் ஓவியம்) Remake (மீட்டுறுவாக்கம்) என்றெல்லாம் கலைகளில் ரசிக்கப்படும் இக்குறுக்குக் கலாசாரம் நம் நடத்தைக் கோலங்களிலும் வாழ்வின் அடிப்படைகளிலும் ஒன்றுபட்ட ஒன்றாக மாறியிருப்பதே கவலையிலும் கவலை.
இவ்வொழுங்கற்ற கலாசாரம் நம் தனித்துவத்திற்கும் சுயத்திற்கும் வேட்டுவைக்க அல்லது இவைகளை வேரோடும் வேரடி மண்ணோடும் களைத்தெறிய மேற்கினால் திட்டமிட்டு அவிழ்த்து விடப்பட்ட செயல்பாடுகள் என்றே கூறவேண்டும். ஏனெனில், மேற்கின் இயங்கியலின் பின்புலத்தே இறுதி இலக்காக இருப்பது உலக பொதுக்கலாசாரம் ஒன்றை உருவாக்குவதாகும். இதனை வேறு விதமாகக் கூறுவதாயின் ஒழுங்கவிழ்ந்த ஒற்றைக் கலாசாரம் (Cultural Homogenization) ஒன்றை உருவாக்குவதாகும் எனக் கூறலாம்.
உலகமயமாதல் (Globalization), நவீன மயமாதல் (Modernization), நாகரீகத்தின் உச்சகட்ட வளர்ச்சி என்றெல்லாம் சொல்லாடல்களில் கூறப்பட்டு வந்தாலும் மறுபக்கப் பார்வையில் இவை மனிதனை இயந்திரங்களாக்கும் முயற்சிகளே எனலாம்.
இரவில் மட்டும் உறவு எனும் ஒரு புதுக் கோட்பாடு உருவாக்கும் அளவுக்கு காலையில் வெளிக்கிட்டால் இரவில் வீடடையும் இயந்திர இயக்கமாகிவிட்டது நம வாழ்க்கை. வானுயர் கட்டிடத்திற்குள் செயற்கைக் காற்றையும், புகையையும், மாற்றான் வியர்வையையும் சுவாசித்தக் கொண்டு நாள் கடத்தும் இவ்வளர்ச்சிப்போக்கு நம் மனித இயல்புகளுக்கு எதிர் செயற்பாடுகளா என்பதுகூட நமக்குத் தெரியாது.
மேற்கு நாகரீக நுகரியாக மாறிவிட்டிருக்கும் நம் தவறுக்கு மேலும் இன்னுமொரு தவறு நாமே நம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய விழுமியங்கள் போன்றவற்றை மறுதலித்தப் பேசுவதும் எதிராக செயற்படுவதுமாகும். இத்தவறை ஒரு அறிஞரின் கூற்றில் கூறுவதானால், “கட்டிடத்தின் அடித்தளமே பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அக்கட்டிடத்தினுள் இருப்பவர்கள் அதற்கு வெள்ளையடிப்பதிலும் பழுது பார்ப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள் ” என்று கூறலாம்.
கூடி வாழல குன்றி குடும்ப மற்றும் சமூகக் கட்டுடைப்பு நிகழ்ந்துவரும் இக்கால வர்த்தமானத்தில் முன்வைக்கப்படும் சிந்தனைகள் பெரிதாக எதனை சாதித்துவிட்டன. “தனிமனிதன் ஒரு குடும்பம், ஒரு குடும்பமே தனிமனிதன்” எனும் மேற்குமய சிந்தனையின் விளைவுகள் எவ்வளவு பாரதூரமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சுவர் சுற்றிய வீடுகளும் வீட்டுக்குள் சொகுசு வசதிகளும் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கூட அறிய, தெரிய அவனை மறக்கடித்துவிடுகின்றது. தனித்தனி சுவர்களுக்குள் இவ்வாறு சுருங்கிப்போகும் செயற்பாடுகள் சமூகத் தளங்களிலிருந்து அவனைத் தூரப்படுத்திவிடுகிறது.
தொடரும்…
உரமாகும் சருகுகள்- 2007