தேசப்பற்றும் முஸ்லிம்களும் – இலங்கைத் தீவின் சுதந்திர தினச் செய்தி!
தேசப்பற்றும் முஸ்லிம்களும் – இலங்கைத் தீவின் சுதந்திர தினச் செய்தி!
பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த தேசம் மீது அன்பு வைக்காத மனிதன் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் தாய் நாட்டின் மீது ஒரு பற்று இயல்பாகவே இருக்கும். நாட்டுப்பற்று என்பது மனித இயல்புணர்வுகளில் ஒன்று. இந்த உணர்வை ஒருபோதும் இஸ்லாம் புறக்கணிக்காது. காரணம், இஸ்லாம் இயல்பு மார்க்கம்.
இஸ்லாத்தின் நிலைப்பாட்டில் தாய் நாட்டின் மீது பற்று வைப்பது முக்கிய ஒரு விடயமாக கருதப்படுகிறது. நாற்றுப் பற்று ஒரு இயல்பான உணர்வு என்பதை நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் இருந்தும், ஸஹாபாக்கள், ஸலபுகள், இமாம்கள் வாழ்வில் இருந்தும் கண்டுகொள்ளலாம்.
நபி(ஸல்) அவர்கள் தான் பிறந்த மண்ணான மக்காவையும், இஸ்லாமிய சமூகம் வளர்ந்த மதீனாவையும் அதிகம் நேசித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஹிராக் குகையில் முதல் வஹி கிடைத்த போது மிகவும் பயந்து நடுங்கியவராக வீடு சென்றார்கள். அதன் பின்னர் கதீஜா நாயகி, நபி(ஸல்) அவர்களை வரகதிப்னு நவ்பல் என்ற பாதிரியாரிடம் அழைத்துச் சென்றார்கள். முன்னைய வேதங்களின் முன்னறிவிப்புகளின் படி நபி(ஸல்) இறுதித் தூதராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தான் பிறந்த மக்கா மண்ணில் இருந்து அவ் ஊர் மக்களால் நபி(ஸல்) அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் வரகதிப்னு நவ்பல் குறிப்பிட்டார்கள். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் மிகவும் ஆச்சரியமாக “எனதூரில் இருந்து எனதூர் மக்களாலேயே நான் வெளியேற்றப்படுவேனா?” என்று வினவினார்கள். அத்தோடு முன்னறிவிப்பு படியே பிறந்தகமான மக்காவில் இருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செல்ல வேண்டி ஏற்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் கடுமையாக கவலைப்பட்டார்கள். மக்காவை விட்டு செல்லும் போது நபி(ஸல்) அவர்கள் தம் தேசப் பற்றை இப்படி வெளிப்படுத்தினார்கள்.
மக்காவை நோக்கி திரும்பிப் பார்த்தவராக “நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)
அதே போல் மக்காவில் இருந்து மதீனா சென்ற ஸஹாபாக்களும் கூட தம் தாய் நாட்டை பிரிந்த கவலையில் கவிதை பாடியிருக்கிறார்கள். மீண்டும் தம் தாய் நாட்டை மிதிக்க கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறார்கள்.
அத்தோடு நபி(ஸல்) அவர்கள் பிலால் அல் ஹபசி(றழி), ஸல்மான் அல் பாரிசி(றழி) போன்ற பிற மண்ணில் இருந்து மக்கா வந்து வாழ்ந்த நபித்தோழர்களை அவர்களது மண் மறக்காது நாட்டின் பெயரோடு சேர்த்தே அழைத்து வந்தார்கள்.
பல இமாம்கள் தாம் வாழ்ந்த மண்ணின் பெயரிலேயே தம்மை பிரபல்யப்படுத்தி கொண்டார்கள். இதனால் பலபோது இமாம்களின் உண்மையான இயற் பெயர்களை விட அவர்கள் வாழ்ந்த ஊரின் பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். இமாம் புகாரி(றஹ்), இமாம் திர்மிதி(றஹ்), இமாம் நஸாஈ(றஹ்) போன்ற பலரை இதன் வரிசையிலே சேர்க்கலாம். தம் நாட்டின் மீது வைத்திருந்த பற்றே இதற்கு முக்கிய காரணமாகும்.
அந்த வகையில் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்தின் நிலைப்பாட்டின் படி நம் தாய் நாட்டை நேசிப்பதில் தவறில்லை .
வரலாற்றாசிரியர் லோனா தேவராஜ் இன் ஆய்வின் படி, நாம் இந்த நாட்டில் 1000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த வரலாற்றை உடையவர்கள் என்ற வகையில் இது நம் தாய் நாடு. அது மட்டுமன்றி நம் தாய் வழிப் பரம்பரை இந்நாட்டின் பூர்வீகக் குடியோடு இணைகிறது என்ற வகையிலும் இது நம் தாய் நாடு. நாம் பிறந்து வளர்ந்து சம்பாதித்து சுதந்திரமாக வாழும் நாடு இந்த இலங்கை.
முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டிற்கு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் வரலாற்று நெடுகிலும் பல பங்களிப்புகளை செய்து வந்திருக்கிறோம். மருத்துவ, இராணுவ, கல்வி, கலாசார, மற்றும் விளையாட்டுத் துறைகள் என பல வகையில் பங்களிப்பு செய்து வந்திருக்கிறோம்; செய்தும் வருகிறோம். எனவே, இந்த வகையில் நம்மை வாழ வைக்கும் நம் தாய் நாடான இலங்கை மீது அன்பு வைப்பது அவசியம் என்பதை இந்த சுதந்திர செய்தியாக முன்வைக்கிறேன்.
நாட்டின் மீது பற்று வைப்பது எப்படி?
01) “இது எம் நாடு” என்ற எண்ணம் உணர்வுபூர்வமாக வரவேண்டும்.
இது நம் நாடு; எம் தாயகம்; எம் பிறந்தகம் என்பதை முதலில் நமக்குள் உணர வேண்டும். மற்றவர்கள் நம்மை ‘வந்தேறு குடிகள்’, வந்தான் வரத்தான்கள்’, ‘துரோகிகள்’, ‘நாட்டுப் பற்றற்றவர்கள்’ எனக்கூறும் அளவுக்கு நாம் கரிசனை அற்றவர்களாகவே காணப்படுகிறோம். நாட்டுப் பற்றின் அடையாளம் நம்மிடம் தென்படாமைக்கு இந்த கரிசனையின்மையே காரணம். முதலில் நாம் ‘இது நம் நாடு’ என்பதை உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் பிறந்த நாட்டின் உணர்வு வெளிநாடு சென்ற பின் தான் பலருக்கும் புரிகிறது. அப்படியல்ல இந் நாட்டில் பிறந்தோம் என்பது ஒரு புறமிருக்க, ‘தாருல் குப்ர்’ ஆன இந் நாட்டில் சிறுபாண்மையினராக இருந்தும் மற்ற நாடுகளை விட இங்கு நாம் நம் செயற்பாடுகளை சுதந்திரமாக செய்து வருகிறோம் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
02) நாட்டுக்காக பிரார்த்தனை புரிதல்.
ஒரு முஸ்லிமின் பலமான ஆயுதமாக துஆ காணப்படுகிறது. எனவே, இந்த துஆவை நாம் அடிக்கடி நாட்டினது நலனுக்காக பயன்படுத்த வேண்டும். இந்நாட்டில் நாமும் நம் சந்ததியினரும் சுபீட்சமாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டியுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்காகவும்