இஸ்பஹான் சாப்தீனின் கவிதைகள் குறித்து…
1 min read01. இஸ்பஹான் சாப்தீ னின் கவிதைகள் குறித்து…
-கவிஞர் அஷ்ஷெய்க் H.I. கைருள் பஷர்(நளீமி)-
இலக்கியம் வாழ்வின் இன்றியமையாத ஒரு தேவை. உள்ளத்தின் உறவாடல் என இலக்கியத்தை மதிப்பிடலாம். உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னத ஊடகமாக கவிதை இலக்கியம் போற்றப்படுகின்றது.
கவிதை இலக்கியம் ஆக்கபூர்வமான சிந்தனைகளால் கருவுரும் போது ஆரோக்கியமான அறிவுக் குழந்தைகளைப் பிரசவிக்கும். அத்தகைய இலக்கியம் வாழ்க்கைப் பாதையை செப்பனிட்டு சமூக மாற்றத்திற்கு வித்திடும்.
இலக்கிய ஆக்கங்கள் வெறும் பொழுது போக்கு முயற்சியாக இருக்கக்கூடாது. அவை ஓர் இலக்கை, தேடலை அடைவாகக் கொண்டிருக்க வேண்டும்.
சிந்தனை ஆற்றலும் கற்பனைத் திறனும் இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருள்கள். இவற்றை மிகையாகப் பெறுகின்றவர்களே இலக்கிய ஈடுபாட்டுக்கு உரித்தானவர்களாவர்.
பரந்த, ஆழமான வாசிப்பு மொழி அறிவை வளர்க்கின்றது; மொழித் திறனை வளப்படுத்துகின்றது. இலக்கிய ஆர்வம் மொழித்திறனாலும் கற்பனை வளத்தாலும் நிர்ணயிக்கப்படுகின்றது.
அறிவும், சிந்தனையும் இலக்கியத்துக்கு உயிரையும் உரத்தையும் வழங்குகின்றன. படைப்புக்களில் யதார்த்தம் தொனிப்பதற்கு இவை நேரடிக் காரணிகளாகும்.
பிரிதொரு நோக்கில், இலக்கியம் இனிமையானது, சுவைக்கும் கனி போன்றது. எழுத்துத் துறையில் ஈடுபடுகின்ற யாவரும் இலக்கியவாதிகளே. எழுத்து நேர்த்தியான சிந்தனையோடு இலக்கிய அறிவையும் வேண்டி நிற்கின்றது. உவமை, உதாரணம், உருவகம், சிலேடை, பழமொழிகள் எழுத்தாக்கத்தை அழகுபடுத்தும் பிரயோகங்களாகும்.
சிறுகதை, கவிதை, நாவல் போன்ற கற்பனை அலங்காரங்களோடு தொடர்பான இலக்கிய ஆக்கங்களில் பொழுதைக் கழிப்போர் உண்மையில் மனித சமூகத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்குவதுடன் தமது உள ஆரோக்கியத்துக்கும் வழியமைத்துக் கொள்கின்றனர்.
எல்லா மனிதர்களும் சிந்திக்கின்றனர். ஆனால் ஓர் இலக்கிய கர்த்தாவின் சிந்தனை அசாதாரணமானது. அவன் தன்னை அதிகம் சிரமத்துக்கு உடந்தையாக்கிக் கொள்கின்றான்.
பிரிவைப் பற்றி விரித்துப் பாடும் கவிஞர் ‘மீண்டும் சந்திக்கலாம்’ என்ற இரண்டாம் கவிதையிலே பிரிவை உறவாகக் காட்ட இப்படி ஒரு உவமையைக் கொண்டு வருகிறார். ரசிக்க இதமாக அமைந்த பதங்கள்.
“நானும் நீயும்
முடிச்சிடப்பட்ட ஒரு கயிற்றின்
இரு அந்தங்கள்
தூரமாகும் போது தான்
இறுகுகிறது”
மண வாழ்க்கைக்காக ஏங்கும் ஒரு மங்கையின் மனநிலையை சிலேடையிட்டு சிறப்பாக விளக்குகின்றது ‘கரம் சேராக் கவிதை’ என்ற ஆக்கம்.
“பாவம் இந்தக் கவிதை
பூப் பெய்தியும்
கரம் சேராதிருக்கிறதே..”
இவை அதன் சில வரிகள்.
தேனீக்களுக்கு மலர்களைக் காட்டிக் கொடுத்து விட்டேன் நான். மலர்களில் அமர்ந்து அமிர்தத்தை உறிஞ்சும் பணி தேனீக்களாகிய வாசகர்களுக்குரியது. முத்தாப்பாய் சில வரிகள்; சில வரிகள் சிலாகித்து விட்டு மொத்தமாய் ரசிக்கும் இல்லை ருசிக்கும் உங்கள் பணிக்கு இடமளித்து விடைபெற முன் மீண்டும் சியாம். எஸ். தீன் என்ற புனைப் பெயர் கொண்ட இஸ்பஹானின் இம் முயற்சி எமக்கும் காலி மண்ணுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது என்பதை உளப் பூரிப்போடு வியந்து, தொடர்ந்தும் இது போன்ற சீரிய இலக்கியப்பணியில் ஈடுபட்டு எதிர் காலத்தில் இதிலும் சிறந்த இலக்கியக் குழந்தைகள் கவிகளாக டிவர் சிந்தனையிலிருந்து பிறக்க வேண்டும் என ஆசித்து விடைபெறுகிறேன்.