உலகம் அழியுமா? அது எப்போது?
1 min readஉலகம் அழியுமா? அது எப்போது?
‘இந்த உலகம் அழியப்போகிறது’ என்ற விடயம் உலக அரங்கில் மிக அதிகமாக பேசப்படும் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. சகல மட்டங்களிலும் இது பற்றியே பேசப்படுகிறது. “மாயன் நாட்காட்டி” “சாஸ்திரம்” என்பவற்றை வைத்து சிலரும், “பகுத்தறிவு” “விஞ்ஞானம்” என்பவற்றை வைத்து சிலரும் பேசிக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்கள் இதனை மிக வேகமாகவே பரவச்செய்துவிட்டன. நம் இஸ்லாமிய சகோதரர்கள் கூட இது பற்றிய வதந்திகளை நம்பி இருக்கிறார்கள். எனவே, இஸ்லாம் இது பற்றி என்ன சொல்கிறது என்பதை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
-
உலகம் நிச்சயம் அழியும்.
உலகம் ஒரு போதும் அழியாது, மாற்றங்களுக்கு மாத்திரமே உட்படும் என விஞ்ஞான, தொழில்நுட்பத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு சாரார் கூறிக்கொண்டிருக்க, மற்றொரு சாரார் உலகம் அழியும் என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
படைப்பாளனான அல்லாஹ்வின் வார்த்தை ‘அல்குர்ஆன்’, முன்னைய வேதங்கள் மற்றும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் போன்றன உலகம் ஒருநாள் நிச்சயம் அழியும் என்ற கருத்தை முன் வைக்கின்றன.
அல்குர்ஆனில் பல இடங்களில் இதனைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். குறிப்பாக மக்கா ஸூராக்கள் மறுமை பற்றியே அதிகம் பேசியுள்ளன. மதீனாவில் இறங்கிய ஸூராக்களிலும் சில இடங்களில் மறுமை பற்றிய ஆயத்துக்கள் உள்ளன. அல் குர்ஆன் கூறவரும் பொதுமைக் கருத்துக்களுள் மறுமை பற்றிய நம்பிக்கையும் ஒன்றாகும்.
இந்த உலகமும் அதில் உள்ளவையும் ஒரு நாள் நிச்சயம் அழிந்தே தீரும், படைப்பாளனான அல்லாஹ் மாத்திரமே நிலையானவன் என்ற கருத்தை அல்குர்ஆன் வலியுறுத்திக் கூறுவதை காணலாம்.
‘பூமியாகிய அதன் மீதுள்ள அனைத்தும் அழியக்கூடியதே! மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் (சங்கையான) முகமே நிலைத்திருக்கும்.’ (ரஹ்மான்-26,27)
‘நிச்சயமாக இறுதிநாள் வந்தே தீரும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, எனினும் மனிதர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்..’ (40:59)
‘மறுமை நாள் எம்மிடம் வரமாட்டாது’ என நிராகரித்தோர் கூறுகின்றனர். ‘அவ்வாறன்று, மறைவானவற்றை அறியக்கூடிய என் இரட்சகன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும்’ (34:3)
தொடரும்…