December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

கிரகணம் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

1 min read

கிரகணம் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

கிரகணங்கள் இரண்டு வகை.

1.சூரிய கிரகணம்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவது சூரியகிரகணமாகும். சந்திரன் விலகும் வரை சூரியன் மறைக்கப்பட்டிருக்கும்.

2.சந்திர கிரகணம்
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.

கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாற்றமாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.


சந்திரன், சூரியன், பூமி மற்றும் இதர விண் பொருட்கள் அல்லாஹ் விதித்த நியதிப்படியே இயங்குகின்றன. அவற்றை உற்று நோக்குவதின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்ளலாம். இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது,

وَكَأَيِّنْ مِنْ آيَةٍ في السَّمواتِ وَالأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُون
“வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் அதைப் புறக்கணித்தவர்களாகவே அவற்றைக் கடந்து செல்கின்றனர் (யூஸுப்:105) என்று குறிப்பிடுகின்றான்.

இந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகவே சந்திர, சூரிய கிரகணங்களும் நிகழ்கின்றன.  இதனை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதை அபூ பக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

عن أبي بكرة قال قال رسول الله صلى الله عليه و سلم
( إن الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت أحد ولكن الله تعالى يخوف بهما عباده( رواه البخاري)

நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும். யாருடைய மரணத்திற்காகவும் அவைகள் மறைவதில்லை. எனினும் அவைகளின் மூலம் இறைவன் தனது அடியார்களை அச்சமூட்டுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)

இப்படியான சந்திர, சூரிய கிரகணங்கள் ஏற்பட்டால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றுவதின் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற முயல்வோம்.

1.தொழுகை:

(فإذا رأيتم فصلوا وادعوا الله “(رواه البخاري…”
‘…நீங்கள் அதனைக்(கிரகணத்தை) கண்டால் தொழுங்கள்”

நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (புகாரி 1046, முஸ்லிம் 1500)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ’அஸ்ஸலாத்து ஜாமிஆ’ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (நூல்கள்: புகாரி 1051, முஸ்லிம் 1515)

என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய பல ஹதீஸ்களில் நாம் காணலாம். அத்தோடு நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையை தொழுதும் காட்டியுள்ளார்கள்.

فَخَسَفَتْ الشَّمْسُ فَرَجَعَ ضُحًى فَمَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ ظَهْرَانَيْ الْحُجَرِ ثُمَّ قَامَ يُصَلِّي وَقَامَ النَّاسُ وَرَاءَهُ فَقَامَ قِيَامًا طَوِيلًا ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ ثُمَّ قَامَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ وَانْصَرَفَ فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ (البخاري

“நபியவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது நபியவர்கள் அறைக்கு முன்னால் நடந்து சென்றார்கள் பின்னர் தொழத் தயாராகினார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் தயாராகினார்கள்.
(பின்னர்) நீண்ட நேரம் தொழுகையில் நின்றார்கள் பின்னர் நீண்ட நேரம் ருகூஃஉ செய்தார்கள்.
பின்னர் (ருகூவிலிருந்து எழுந்ததும்); மீண்டும் நீண்ட நேரம் தொழுகையில் நின்றார்கள் அது முதல் நின்ற அளவை விட சற்றுக் குறைவாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூஃஉ செய்தார்கள் அது முதல் செய்த ருகூஃவை விட சற்றுக் குறைவாக இருந்தது.
பின்னர் ருகூஃவிலிருந்து எழுந்து ஸஜ்தா செய்தார்கள். இவ்வாறே அடுத்த ரக்அத்திலும் செய்தார்கள் இவ்வாறு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடிக்கொள்ளுமாறு ஏவினார்கள்” (புஹாரி:1046)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் பார்த்தால் நபி(ஸல்) அவர்களின் கிரகணத் தொழுகை அமைந்திருந்த முறையை இப்படித் தெளிவுபடுத்தலாம்.

>அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.
>பள்ளியில் தொழ வேண்டும்
>இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்
>மிக நீண்ட நேர தொழுகை
>நீண்ட கிராஅத்
>இரண்டு ரக்காத்துகள்
>ஒவ்வொரு  ரக்காத்திலும் இரண்டு ருக்கூஃ
>ஜமாஅத்தாக தொழுல்
>பின்னர் உரை நிகழ்த்துதல் (சூரிய கிரகணம் நீங்கிய பின்)

2.துஆ மற்றும் இஸ்திஃபார் செய்தல்.

( ولكن الله تعالى يخوف بهما عباده( رواه البخاري…..’

“…..எனினும் அவைகளின் மூலம் இறைவன் தனது அடியார்களை பயமுறுத்துகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புஹாரி )

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். (புஹாரி எண் 1059)

கிரகணத்தை ஏற்படுத்துவதன் மூலம் அல்லாஹ் மனிதர்களை அச்சமூட்டுகின்றான் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் அதிகதிகம் துஆ கேட்குமாறும் இஸ்திஃபார் செய்யுமாறும் பாதுகாப்புக் கோருமாறும் பணித்துள்ளார்கள்.

இது பற்றி ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் (ஸல்) அவர்கள் எனது இரு கைகளையும் பற்றி சந்திரனை அது உதயமாகும் வேளையில் எனக்கு காண்பித்தார்கள். (பின்னர்) இரவு பரவி விடும் போது அதனுடைய தீங்கை விட்டும் (ஆயிஷாவே!) நீ இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடிக்கொள்! எனக்கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்-23187)

3.தக்பீர் சொல்லல்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டால் அவற்றை எண்ணிப் பார்க்காது, சிந்திக்காது இருப்பது ஒரு முஃமினுடைய செயலல்ல. இவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் அல் குர்ஆனில் இப்படிக் கூறுகிறான். “வானங்கள் மற்றும் பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் அதைப் புறக்கணித்தவர்களாகவே அவற்றைக் கடந்து செல்கின்றனர்” (யூஸுப்:105) ஒரு முஃமின் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பற்றி அதிகம் சிந்திப்பான். அதனூடாக படைப்பாளனின் சக்தியை உணர்ந்து கொள்வான். தன்னை தாழ்ந்தவனாகவும் இறைவனை மட்டுமே பெரியவனாகவும் காண்பான். அப்போது அவன் “அல்லாஹு அக்பர்” அல்லாஹ் மிகப் பெரியவன் என்று தக்பீர் முழங்குவான். இதனாலேயே நபி(ஸல்) அவர்கள் கிரகணம் ஏற்பட்டால் “தக்பீர்” சொல்லுமாறு கூறினார்கள்.

4.ஸதகா(தர்மம்) கொடுத்தல்.

“ஸதகா செய்வதால் தீங்குகள் தூரமாகும்” என்பது நபி வாக்கு, அத்தோடு சோதனைகளின் போது தர்மம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் வழியுறுத்தி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கிரகணம் போன்ற சோதனைகளின் போது அதிகமதிகம் நாம் தர்மம் புரிந்திடல் வேண்டும். நபி(ஸல்) அவர்கள் கிரகணம் ஏற்பட்டால் ஸதகா செய்யுமாறு குறிப்பாகவும் கூறியுள்ளார்கள். இதனையும் கீழே குறிப்பிட்டுள்ள ஹதீஸில் காணலாம்.

قال رسول الله(صلعم): فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا (البخاري)

“நீங்கள் அதனைக் கண்டால் இறைவனிடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் மேலும் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறுங்கள். தொழுங்கள் இன்னும் தர்மம் புரியுங்கள் என நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புஹாரி)

5. மூட நம்பிக்கை ஒழித்தல்.

கிரகணம் ஏன் ஏற்படுகிறது, கிரகணம் ஏற்பட்டால் என்ன செய்யக் கூடாது, என்ன செய்ய வேண்டும்? என்று இஸ்லாம் கூறாத பல மூட பழக்க வழக்கங்கள் நம் சமூகத்தன் மத்தியில் கூறப்படுவதை நாம் காண்கிறோம். இவ்வாறான மூட நம்பிக்கைகளை இல்லாமல் செய்வதும், இஸ்லாமிய நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதும் அவசிமாகும்.

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் இப்படியான மூட நம்பிக்கைகள் காணப்பட்டன. எவ்வாறெனில் யாராவது மரணித்து அந்த வேளையில் கிரகணம் ஏற்பட்டால் அவரது மரணத்தினாலேயே கிரகணம் ஏற்பட்டது என்று அந்த சமூகம் நம்பியது. இந்த நம்பிக்கையை நபி(ஸல்) அவர்கள் இல்லாமல் செய்தார்கள்.

عن المغيرة بن شعبة قال: كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه و سلم يوم مات إبراهيم فقال الناس كسفت الشمس لموت إبراهيم فقال رسول الله صلى الله عليه و سلم ( إن الشمس والقمر لا ينكسفان لموت إحد ولا لحياته فإذا رأيتم فصلوا وادعوا الله(رواه البخاري)

நபியவர்களது காலத்தில் இப்றாஹீம் (நபி(ஸல்) அவர்களது மகன்)  மரணித்த தினம் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)

6.அடிமை விடுதலை.

عَنْ أَسْمَاءَ قَالَتْ : لَقَدْ أَمَرَ النَّبيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَاقَةِ فِي كُسُوفِ الشَّمْس – البخاري
நபிகள் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளை பிறப்பித்தார்கள் என அஸ்மா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி)

கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்வது பற்றி  மேற் கூறிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. தற் காலத்தில் அடிமைகள் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அடிமை முறை காணப்பட்டது. (அடிமை முறையை இல்லாதொழிக்க எப்படியெல்லாம் நபி(ஸல்) அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.)

இஸ்பஹான் சாப்தீன்.
2012.11.28
(சந்திர கிரகண நாள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.